இந்தியாவில் அலுவல் மொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் கூட்டத்தில் அக் குழுவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஏப்ரல் 7 ஆம் தேதி பேசியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி இரவு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
“ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
இந்தி மாநிலம் போதும் இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா?
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றை திரும்பத் திரும்ப செய்கிறீர்கள் ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.
**வேந்தன்**