தை புத்தாண்டா? இல்லையா? பொங்கல் பை சொல்லும் செய்தி!

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுதும் இன்று முதல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

முதல்வர் வழங்கிய இந்த பொங்கல் பையில், திமுகவின் கொள்கையான, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. பொங்கல் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. பொங்கல் பையின் ஒரு பக்கத்தில்,

’தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்டு, அதன் கீழே, ’மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்- மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கத்தில் பொங்கல் கொண்டாடும் சித்திரம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்ப் புத்தாண்டு தை 1 என்ற திமுகவின் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டதோ அரசு என்ற விவாதங்கள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

முன்னதாக… ஒரு மாதத்திற்கு முன்பு, 2.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான திட்டத்தை அரசு வெளியிட்டது.அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ’தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்’ தெரிவித்ததாகவே சமூக தளப் பக்கத்தில் படங்கள் பரவின. ஆனால், 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்த தமிழக அரசு, சித்திரை 1 (ஏப்ரல் 14, 2022) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை என அறிவித்தது. ஜனவரி 14 அதாவது தை முதல் தேதியை பொங்கல் பண்டிகை என்றுதான் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. அப்போதே தமிழக அரசு இதில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற கேள்விகள்

ஆனால் இப்போது அந்த பரிசுப் பை வழங்கும்போது தமிழ்ப் புத்தாண்டு என்றும் இல்லை, பொங்கல் என்றும் இல்லை. தமிழர் திருநாள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதி அல்ல தை முதல் தேதிதான் என்று குறிப்பிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டார். ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதிதான் என்று அறிவித்தார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு என்று கூறினார்கள்.

இதற்கிடையே மூத்த அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் 17ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது அவர் நீட் விவகாரம் குறித்து ஆளுநரோடு பேசியதாக கூறப்பட்டாலும்… தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் அரசாணை தொடர்பாக விவாதித்தாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அரசின் இந்த முயற்சிக்கு ஆளுநர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து மின்னம்பலத்தில், [தை புத்தாண்டு: முதல்வர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்?]( https://minnambalam.com/politics/2021/12/26/18/thai-chithirai-governor-rnravi-cm-mkstalin) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று வழங்கப்படும் பொங்கல் பைகளில் தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்றே இடம்பெற்றுள்ளது. எனினும் ஆளுங்கட்சி தரப்பில் நம்மிடம் பேசிய சிலர், “இந்த பரிசுப்பைகள் இரு வேறு வகைகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு என்றும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன” என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன, தை தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு நாளை (ஜனவரி 5) தொடங்க இருக்கும் சட்டமன்றத்தில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share