ஆட்சியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்துள்ளார் என்று அமைச்சர் உதயகுமார் பாராட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று இன்று (பிப்ரவரி 16) நான்காவது ஆண்டை தொடங்கியது. அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருபுறம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லிவருகின்றனர். ஆனால், 3 ஆண்டுகளில் எதுவுமே நடைபெறவில்லை என கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கத்தின் மாநாடு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “ இன்றுடன் நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளோம். மூன்று நிமிடங்கள் ஆட்சி நீடிக்குமா என்று கேட்டவர்களுக்கு தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு பாராட்டியிருப்பார்” என்று தெரிவித்தார்.
சிஏஏ போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது தொடர்பான கேள்விக்கு, “தமிழகத்தை அமைதிப் பூங்காவாக காக்க வேண்டிய கடைமை தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உள்ளது. காவல் துறையினர் போராட்டத்தை படிப்படியாகவே கையாளுகிறார்கள். அரசின் பிரதிநிதியாகவே போராட்டக்காரர்களிடம் பேசுகிறார்கள். சமரச முடிவுக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
ரஜினி அரசியலுக்கு வருவது தொடர்பான கே.எஸ்.அழகிரியின் கருத்துக்கு, “காலாவதியான கட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்களின் கருத்து பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.�,