தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வாரம் ஒருமுறை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், வாரம் இருமுறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று (நவம்பர் 18) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இன்று (நேற்று) நடைபெற்ற ஒன்பதாவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 8,36,796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 3,36,468 பேரும் இரண்டாவது தவணையாக 5,00,328 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், தடுப்பூசி முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி.
தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 4,29,68,122 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 2,14,23,780 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மொத்தமாக 6,43,91,902 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
மழைக்கால நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக 30,836 இடங்களில் வாகனங்கள் மற்றும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இதில் 11,88,549 பேர் பயனடைந்துள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450இல் இருந்து 532 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 532 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவிலியர்கள் சிரமம் பாரது தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நாட்களில் வீடு தேடி தடுப்பூசி திட்டம் செயல்படாது.
மேலும், 4,800 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு செவிலியர்கள் தேவை என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பணி நியமனம் செய்யப்படும். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வைத்துள்ள ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
**மெகா தடுப்பூசி முகாம்**
முதலாவது முகாம்: 28.91 லட்சம் பேர்
இரண்டாவது முகாம்: 16.43 லட்சம் பேர்
மூன்றாவது முகாம்: 25.04 லட்சம் பேர்
நான்காவது முகாம்: 17.04 லட்சம் பேர்
ஐந்தாவது முகாம்: 22.85 லட்சம் பேர்
ஆறாவது முகாம்: 23.27 லட்சம் பேர்
ஏழாவது முகாம்: 17.20 லட்சம் பேர்
எட்டாவது முகாம்: 16.40 லட்சம் பேர்
ஒன்பதாவது முகாம்: 8.36 லட்சம் பேர்.
**-வினிதா**
�,