கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து கிடந்த தம்பதியை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). இவர்கள் இருவரும் இன்று (செப்டம்பர் 19) இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி தேவாலய வழிபாட்டுக்கு சென்றனர்.
வீராணம் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் தம்பதியரின் இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு சென்றது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர்.
அப்போது, கடலூர் மாவட்டத்தில் கழகத்தினரின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின், அந்த வழியாக காரில் சென்ற வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சாலையில் இருவர் அடிப்பட்டு கிடப்பதை பார்த்து தனது காரிலிருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.
விபத்தில் சிக்கிய வயதான தம்பதியரை மீட்டு தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அவரது உதவியாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, பாதுகாப்பு போலீஸார் மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் அந்தத் தம்பதியரை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
**-வினிதா**
�,