தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்தாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இந்த ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருவல்லிகேணியில் இன்று(ஜனவரி 26) செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,”பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைந்து வரும் பட்சத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்வு எழுதுகின்ற 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஊரடங்கு தொடர்பான ஆலோசனையில் இதுகுறித்து விவாதிக்கப்படும். 1முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் முதல் கற்பித்தல் பணிகள் நடக்கின்றன. அதனால் பிரச்சினையில்லை.
பொதுத் தேர்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும். கடந்த காலங்களில் பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இந்தாண்டும் வினாத்தாள் அமைக்கப்படும்” என்று கூறினார்.
ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துரை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,” ஆரம்பத்திலிருந்தே நீட்டை நியாயப்படுத்தும் விதமாக தான் பேசி வருகிறார். ஆனால் நீட் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் சரி, தற்போது முதல்வராக உள்ளபோதும் சரி நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு முயற்சிகளையும், சட்ட போராட்டங்களையும் முதல்வர் நடத்தி வருவதை அறிந்திருக்கிறோம். ஆளுநர் உடனடியாக நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
இரு மொழி கொள்கை தான் நமது கொள்கை. அதில் என்றும் பின் வாங்க மாட்டோம். ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதல்வர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அரசு பள்ளிகள் வறுமையின் சின்னமாக இல்லாமல், பெருமையின் சின்னமாக மாற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முயற்சித்து வருகிறோம். இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்கக் கூடியாது கிடையாது, கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,