கொரோனா: 14 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதா?

Published On:

| By Balaji

கொரோனா தொற்று பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பிறகு துரிதமாக செயல்படுவதாக கூறுவதா? என மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டு தொடர்பான விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இன்று(ஏப்ரல் 29) மீண்டும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “ கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும், இரண்டாவது அலை எதிர்பாராத ஒன்று. போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இவ்வளவு நாட்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது. கொரோனா தொற்று பரவத் தொடங்கி 14 மாதங்கள் கழிந்த பிறகு துரிதமாக செயல்படுவதாக கூறுவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

கொரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பேரிடரின் போது, அந்த சமயத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share