iஜெ.-ஜா. இடையே சமரசம் பேசினேன்: சசி லீக்ஸ்

politics

அலைபேசியில் தொண்டர்களுடனான உரையாடலில் எம்.ஜி.ஆரே சில சமயம் தன்னிடம் கட்சி பற்றி கருத்துகளைக் கேட்டதாகவும், ‘அப்படி செஞ்சா நல்லா இருக்கும் தலைவரே’ என்று தான் கூறியதாகவும் சசிகலா குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மறைவின் போதும், அதற்குப் பின்னரும் ஜெயலலிதாவுடனான தனது அனுபவங்களை தி வீக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் சசிகலா நினைவு கூர்ந்துள்ளார்.

“எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 ஆம் தேதி அதிகாலையில் காலமானார். தகவல் அறிந்ததும் நானும் அக்காவும் (ஜெயலலிதா) உடனடியாக எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு சென்றோம். அப்போது தோட்டத்தின் வாசல் கேட் மூடியிருந்தது. நாங்கள் அதை உடைத்துத் திறந்தோம். அக்காவைப் பார்த்த எம்ஜிஆரின் குடும்பத்தினர் அவரை தரைத் தளத்திலேயே இருக்கும் ஓர் அறைக்கு இழுத்துச் சென்று அங்கேயே அடைத்து வைக்க முயன்றனர். ஆனால் நாங்கள் அங்கே செல்லவில்லை. இதற்கிடையில் எம்.ஜி.ஆரின் உடல் முதல் தளத்தில் இருந்து கீழேகொண்டுவரப்படுவதையும், ஸ்டெரச்சரில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவதையும் பார்த்தோம்.

உடனடியாக நாங்கள் எங்கள் காருக்குச் சென்று அந்த ஆம்புலன்ஸை வேகமாக பின் தொடர்ந்தோம். அப்போது எங்கள் காரை ஓட்டியவர் டிடிவி தினகரன்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது எம்.ஜி.ஆர். உடல் இருந்த வண்டியில் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார். அதன் பின் ஜெயலலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். போயஸ் கார்டன் வந்ததும், தனது தாயார் சந்தியாவின் படம் அருகே அமர்ந்து ஜெயலலிதா அழ ஆரம்பித்துவிட்டார். ’நான் தோத்துட்டேன்ம்மா….’ என்று சொல்லி ஜெயலலிதா அழுத அழுகை என்னை வெகுவாக பாதித்துவிட்டது. இனிமேல் ஜெயலலிதாவுடனேயே இருக்க வேண்டும் என்று அப்போதுதான் முடிவெடுத்தேன்,

எம்.ஜிஆரின் ஆசி ஜெயலலிதாவுக்கு இருந்தபோதும் அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுக என்ற கட்சியில் தன் உயரத்தை அடைவதற்கு ஜெயலலிதா கடுமையாக போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தில்தான் அதிமுக ஜெ. அணி என்றும் ஜா. அணி என்றும் இரண்டு பிரிவானது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவருடன் நான் சென்றேன். ஜெயலலிதா தனக்காக ஓர் கட்சி அலுவலகத்தை அப்போது தேடிக் கொண்டிருந்தபோது எனது கணவர் நடராஜன் மூலமாக ஆழ்வார்பேட்டையில் ஓர் இடத்தை ஒரே இரவில் பிடித்தோம். பாரிமுனையில் இருந்து நீண்டதொரு இரும்பு ராடு வாங்கிவந்து அதில் வெள்ளை சிவப்பு வண்ணமடித்து ஜெயலலிதாவின் கொடியேற்றுவதற்காகத் தயார் செய்தோம்.

இதற்கிடையே நானும் என் கணவர் நடராஜனும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியிடம் சமரசம் பேசுவதற்காக சென்றோம். ‘அங்கே போகாதே…அதனால் நமக்கு ஒன்றும் ஆகப் போவது இல்லை’ என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் நான் அப்போது, ‘நான் ஜானகியம்மாவை பார்த்து பேசி சம்மதிக்க வைத்து கட்சியை ஒன்றாக்குகிறேன்’ என்று உறுதியாக ஜெயலலிதாவிடம் சொன்னேன். ’அதுக்கு மேல உன் விருப்பம்’என்று சொல்லிவிட்டார் ஜெயலலிதா. அதன் பிறகு ஒரு மாலையில் நான் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை சந்தித்தேன். அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசினோம். அதன் பிறகு ஜானகி தனது நிலையில் இருந்து இறங்கிவந்தார். ஜெயலலிதாவிடம் அதிமுகவை விட்டுக்கொடுக்க அவர் முடிவு செய்து, அதை தூர்தர்ஷனுக்கு ஏ.வி. ரமணன் மூலமாக தெரிவித்தார். அக்கா ஜெயலலிதா அதன் பிறகுதான் அதிமுகவின் ஏகோபித்த தலைவராக கட்சியைக் கைப்பற்றினார்”என்று அன்றைய சம்பவங்களை நினைவுகூர்ந்திருக்கிறார் சசிகலா.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *