தெலங்கானா மாநிலத்தில் உள்ள சட்டமேலவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகள் சுரபியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ். இதன் மூலம், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரே நேரத்தில் சவால் விட்டிருக்கிறார்.
சட்டமேலவை இருக்கும் எல்லா மாநிலங்களைப் போலவே, தெலங்கானாவிலும் பட்டதாரிகள் வாக்களிக்கும் தொகுதிகள் உண்டு. இதில் ஐதராபாத்- ரங்காரெட்டி-மகபூப்நகர் மற்றும் வாரங்கல்-கம்மம்-நலகொண்டா ஆகிய பட்டதாரி தொகுதிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் அடுத்த மாதம் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஐதராபாத் அடங்கிய தொகுதியில் பாஜகவும் வாரங்கல்லில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் தற்போது பதவியில் இருக்கின்றன. காலியாகும் இந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்றுதான் கடைசி நாள்.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஐதராபாத் தொகுதியில் தற்போதைய உறுப்பினர் ராமச்சந்தர் ராவையே பாஜக மீண்டும் நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னா ரெட்டியைக் களமிறக்கியுள்ளது.
சமிதியின் சார்பில் மட்டும் யார் வேட்பாளர் என்பதைக் கடைசி நேரம் வரை அந்தக் கட்சித் தலைமை அறிவிக்காமல் இழுத்தடித்தது. பல்லா ராஜேஸ்வர்தான் வேட்பாளர் எனக் கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால், கட்சிக்குள்ளேயும் வெளியிலும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவியது.
ஒருவழியாக மனுத்தாக்கல் கெடு நாளான நேற்று நரசிம்மராவின் மகள் சுரபி வாணி தேவியைச் சமிதியின் வேட்பாளராக அறிவித்தார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். தயாராக இருந்த சுரபியும் கையோடு தேர்தல் அதிகாரியான ஐதராபாத் மாநகராட்சி கூடுதல் ஆணையர் பிரியங்கா ஆலாவிடம் நேற்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
எப்பாடு பட்டாவது சுரபியை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என மூன்று மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளையும் வரவழைத்து கட்டளையிட்டிருக்கிறார்,சந்திரசேகர் ராவ். மனுத்தாக்கலுக்கு முன்னர் குன் பூங்காவில் உள்ள தெலங்கானா தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று மலர் மரியாதை செலுத்தினார் சுரபி. அப்போது அங்கு பேசிய அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மரியாதை அளிக்கும்விதமாக சுரபிக்குப் போட்டியாக யாரும் போட்டியிடாமல் விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மற்ற சமயங்களில் இப்படியான வேண்டுகோள்கள் வெறும் சம்பிரதாயமாகவும் கடந்துபோய்விடும். இந்த ஆண்டு நரசிம்மராவின் நூற்றாண்டு என்பதால், இது சென்டிமென்ட்டாகப் பார்க்கப்படுகிறது. தெலங்கானா தனி மாநிலமாக மாறிவிட்டாலும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சரான நரசிம்மராவுக்கான செல்வாக்கு மங்கிப்போய்விடவில்லை என்பது சந்திரசேகர் ராவின் கணக்கு.
நூற்றாண்டு விழாவிலேயே சந்திரசேகர் ராவ் தன்னுடைய நகர்வைத் தொடங்கிவிட்டார். நரசிம்மராவின் சொந்தக் கட்சியான காங்கிரசையும் முந்திக்கொண்டு அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப்போவதாக அறிவித்தார், சந்திரசேகர். இவர் அறிவித்ததாலேயே காங்கிரஸ் கட்சியும் நரசிம்மராவ் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதாக அறிவிக்கவேண்டியதானது.
சந்திரசேகருக்கு இதில் இன்னுமொரு நிர்பந்தமும் காத்திருக்கிறது. கடந்த டிசம்பரில் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான சமிதி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மொத்தமுள்ள 150 வார்டுகளில் 44 இடங்களை இழந்து 55 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி பெற்றது. 44 இடங்களை வைத்திருந்த பாஜக கூடுதலாக 4 இடங்களைப் பிடித்தது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியை வென்ற ஒவைசியின் முஸ்லிம் மஞ்லிஸ் கட்சி முதல்முறையாக 44 இடங்களில் வென்றது.
அதே ஐதராபாத்தில் தன் பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம், சந்திரசேகர் ராவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் அவர் சுரபியைத் தெரிவுசெய்தார்.
நரசிம்மராவ் சென்டிமென்ட் மூலம் காங்கிரஸ் தரப்பு வாக்குகளைக் கணிசமாக அள்ளலாம் என்பதுடன், பல இடங்களில் கல்வி நிலையங்களை நிறுவியுள்ள சுரபி வாணி தேவிக்கு பட்டதாரிகளிடையே இருக்கும் செல்வாக்கும் கைகொடுக்கும் என்பதும் சந்திரசேகரின் மனக்கணக்கு. இன்னுமொரு முக்கிய உத்தியையும் கைக்கொண்டிருக்கிறார், சந்திரசேகர். பா.ஜ.க., சமிதி இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே சமூகத்தினர் என்பதால், சுரபி வாணிக்கு அதில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
ஐதராபாத் சட்டமேலவைத் தேர்தலில் சந்திரசேகரின் கணக்கு சரிவருமா, இடம் பறிபோகுமா என்பது 5, 17, 883 பட்டதாரிகளின் கைகளில் இருக்கிறது!�,