சிறப்புக் கட்டுரை: மோடியின் செல்வாக்கு குறைகிறதா?

politics

�

கபில் கோமிரெட்டி

லுட்யென்ஸ் வடிவமைத்த மகோன்னத தலைநகரை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டம் மோடியின் தலைக்கனத்துக்கு ஒரு நினைவுச்சின்னமாக விளங்கும்

‘புதியதொரு புதுடெல்லி எழட்டும்’ என நரேந்திர மோடி சென்ற ஆண்டு ஆணையிட்டார். ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டுக்கு மண்வாசனை கமழும் தலைநகரம் ஒன்றை அர்ப்பணிப்பது இந்தியப் பிரதமரின் கனவு’ என அவரது சேவகர் ஒருவர் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த ஆசைக் கனவோ, கொடூரக் கனவு ஒன்றிலிருந்து தொடங்கிய ஒன்று. 2002ஆம் ஆண்டில் இந்து சனாதனவாதியாகவும் அவ்வப்போது பிற்போக்குவாதியாகவும் விளங்கியவர் இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மனோகர் ஜோஷி. அவர் அப்போது பணிபுரிந்துவந்த, பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட, வட்டவடிவ நாடாளுமன்றக் கட்டடம் சாபக்கேட்டுக்குள்ளானது என உறுதியாக நம்பினார்.

அதற்கு முந்தைய ஆண்டில் ஜோஷியின் சகதலைவர்கள் பலர் வரிசையாக ஒவ்வொருவராக இறந்திருந்தனர். இந்தியாவின் மக்களவையான லோக் சபாவில் ஜோஷிக்கு முன்பு சபாநாயகராக இருந்தவர் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்பு ஹெலிகாப்டர் ஒன்று விசித்திரமாக விழுந்து நொறுங்கியதில் கொல்லப்பட்டார். இங்கிலாந்தின் பிரபுகள் அவை போலவும் அமெரிக்காவின் செனட் போலவும் வடிவமைக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவுக்குத் தலைவராக விளங்கிய இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடப்பிலிருந்தபோதே இறந்துபோனார். குடியரசுத் துணைத்தலைவர் நம்மை விட்டுச் செல்வதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடுக்க வந்த பாகிஸ்தான் ஆதரவுடன் கூடிய ஆயுதமேந்திய போராளிகளுடன் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிற்கதவுகளுக்கு அருகே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அரை டஜனுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

பலர் படுகொலைக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. ஆனால், மரணபலிகளும் வேறுபாடுகளும் அதிகார வட்டாரங்களைத் தொடர்ந்து பீடித்து செயலிழக்கச் செய்தன. பாகிஸ்தானுக்குள் நுழைந்து திருப்பியடிக்கும் உத்தரவுக்காக எல்லையில் காத்திருந்த இந்திய ராணுவ வீரர்கள் பெருஞ் சேதத்துக்கு உள்ளாயினர். புதுடெல்லியிலோ அரசுப்பணிகள் முடங்கிப்போயின. டஜன் சிறிய கட்சிகளின் உறுதியற்ற கூட்டணி ஒன்றுக்குத் தலைமை தாங்கி இந்துக்களுக்கே முதலிடம் என்ற கொள்கையைக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியால் புதிதாக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்த ஜோஷி நாடாளுமன்ற வளாகம் குறித்து ஏதாவது செய்தாக வேண்டுமென முடிவெடுத்தார்.

அவர் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி ஆராய்ந்து மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்களைப் பரிந்துரை செய்யும்படி வழக்கறிஞரும் சீனக் கட்டடக்கலையான ஃபெங் ஷுயிக்கு நிகரான புராதன இந்தியக் கட்டடக்கலையான வாஸ்து சாஸ்திர நிபுணருமான அஸ்ஹவினி குமார் பன்சாலை வரவழைத்தார். வாஸ்து சாஸ்திரம் குறித்தும் ஃபெங் ஷுயி குறித்தும் 30 புத்தகங்களை வெளியிட்டுள்ள பன்சால், எட்வர்ட் லுட்யென்ஸால் ரெய்சினா மேட்டுநிலங்களில் வடிவமைக்கப்பட்டு ‘புதுடெல்லி’ என 1931இல் தொடக்க விழா கண்ட அந்த பிரமாண்ட நகரின் காதல்கன்னியாக ஹெர்பர்ட் பேக்கரால் நிர்மாணிக்கப்பட்ட தூண் வரிசைகள் தாங்கி நிற்கும் இந்த அரங்கின் அறைகள் மற்றும் தாழ்வாரங்களில் சுற்றிவந்தார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஜனநாயகத்தின் விவாதங்கள் அனைத்தும், அவை மலிவானதாக இருப்பினும் சரி மதிப்புமிக்கதாக இருந்தாலும் சரி, அவ்விவாதங்களனைத்தும் செம்பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்ட இந்த நாடாளுமன்றக் கட்டடத்தின் சுவர்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. மக்களவையையும் மேலவையையும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்த இரு அவைகளின் கூட்டான அமர்வு நடைபெறுகின்ற, 15 ஆகஸ்ட் 1947 அன்று நள்ளிரவில் நவீன இந்தியாவின் பிறப்பை நேரு பிரகடனம் செய்த, நாடாளுமன்ற மைய அரங்கத்தையும் இக்கட்டடம் தன்னகத்தே கொண்டுள்ளது.

இருப்பினும் வரலாறும் வரலாற்றின் பிரமாண்டமும் பன்சால் இந்த இடத்தை சோதனையிட்டபோது அவர் அனுபவித்த ‘எதிர்மறை சக்தி மற்றும் அதிர்வு’களால் அடித்துச்செல்லப்பட்டன. ‘தேசத்தின் அரசியலமைப்பை அவதிக்குள்ளாக்கியிருப்பது இந்த வட்டவடிவக் கட்டடம்தான்’ என ரகசிய குறிப்பு ஒன்றில் அவர் அறிவித்திருந்தார். ‘வெளிநாட்டவர் ஒருவரால் அவர் மனம்போனபோக்கிலே வடிவமைக்கப்பட்ட விசித்திரமானதொரு கட்டடம் அது’ என அவர் தெரிவித்திருந்தார். அது இந்து அல்லது இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ கட்டடக்கலை பாரம்பரியத்துக்கு சற்றும் உகந்ததாக இல்லை. ‘பூஜ்யம்’ என்ற உணர்வைத் தோற்றுவித்து ‘சூனியம் மற்றும் ஏதுமில்லாமை’யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் வட்ட வடிவம் ‘அதோடு தொடர்புகொள்ளும் எதையும் அழிக்கும்’ மாயாஜால சக்தியை அதற்குக் கொடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களும் அவர்களது சந்ததியினரும் திடீரென மறைந்ததை அந்தக் கட்டடத்தின் கெட்ட சகுனம் நிறைந்த தன்மைக்கு ஆதாரமாகக் காட்டிய பன்சால் நான்கு இந்தியப் பிரதமர்கள் ‘அகால மரணம்’ அடைந்ததற்குக் காரணம், அக்கட்டட வடிவமைப்பில் அவர் கண்டுபிடித்த ‘கோளாறுகளே’ எனத் தெரிவித்தார். இந்தக் கட்டடத்தை காலி செய்து அதை ஓர் அருங்காட்சியகமாக மாற்றி நாடாளுமன்றத்தை அருகிலுள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றுக்கு மாற்றியமைக்கும்படி அவர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த பன்சாலுடைய அறிக்கை மிகுந்த தீவிரத்தன்மையுடனேயே அதை தயார் செய்யும்படி பணிக்கப்பட்டிருந்தாலும் தீவிரமாகவே பரிசீலனைக்குள்ளானாலும் சரி அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதன் உள்ளடக்கம் வாஸ்துவை போலி விஞ்ஞானம் எனக் கருதிய இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேய கலாச்சராத்தின்பாற்பட்ட லிபரல் மேட்டுக்குடியினரிடமிருந்தும் கிண்டலையும் கேலியையும் கிளப்பும் என்ற அச்சத்தால் ஜோஷி அதை கிடப்பில் போட்டார். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரியநேரத்துக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது, ஜோஷியும் அவரது சொந்த பதவியை இழந்தார். மீண்டும் 2012இல் காங்கிரஸ் தலைமையிலான மதச்சர்பற்ற கூட்டணியால் சந்தடியின்றி இது முன்வைக்கப்பட்டது. கட்டடத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நாடாளுமன்ற இடமாற்றத்துக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. ஆயினும் கமிட்டியிலேயே இது மடிந்தது. ஆனால் நரேந்திர மோடி மீண்டும் இதை உயிர்ப்பித்தார்.

மோடிக்கு முன்னர் இருந்தவர்களுக்கு இருந்தது போல மோடிக்குக் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளால் தடங்கல்கள் எதுவும் இருக்கவில்லை. 2014 இல் அவர் தலைமையில் பிஜேபி பெற்ற வெற்றி 25 ஆண்டுக்கால கூட்டணி ஆட்சி காலகட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. முந்தைய அரசின் ஆலோசகர் ஒருவர் தேர்தல் முடிவுகளை ‘இரண்டாவது குடியரசின்’ பிறப்பு என வர்ணித்தார். அவர் பொருள்படுத்தியது என்னவென்றால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பிறகு வந்த ஆங்கிலமயமானவர்களால் நிறுவப்பட்ட லிபரல் அரசு போய் முற்றிலும் புதிதான மாறுபட்ட ஒன்று வந்துவிட்டது என்பதாகும்.

மோடி பாரம்பரிய புரிதல்படியான ஒரு பிரதம மந்திரி மட்டுமல்ல. அவரைத் தூக்கிவைத்து கொண்டாடுபவர்களால் ‘புதிய இந்தியா’ என அழைக்கப்படுகிற இந்தியாவின் பிதாமகனாகவே அவர் தன்னைத் தானே கருதுகிறார். அத்தகைய அதிரவைக்கும் தலைக்கனம் கொண்ட ஒரு மனிதர் வரும் வரலாறு நெடுகவே தன் நினைவு முத்திரையைப் பதிக்க இன்றோ, நாளையோ முயற்சி செய்வார் என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

நாடாளுமன்றத்தைப் புதுப்பித்து வேறு இடத்துக்கு மாற்றுவது என்ற சர்ச்சைக்குரிய ஆனால் ஒப்பீட்டளவில் சிறியதொரு அளவிலான கருத்து அவரது மேற்பார்வையில் ஒரு புதிய புதுடெல்லியை கட்டமைப்பது என்ற பிரமாண்டமான தற்பெருமை திட்டமாக மலர்ந்தது. இத்திட்டத்துக்கு இரண்டு பில்லியன் பவுண்டுகள் (18,915 கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (இதோடு ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் கொள்ளைநோயை எதிர்கொள்ள இந்தியாவின் அவசரநிலை ஆரோக்கிய தேவைகளுக்காக கேவலம் 1.6 பில்லியன் பவுண்டுகளையே — அதாவது 15,125 கோடி ரூபாயே — மோடி வேண்டாவெறுப்பாக ஒதுக்கினார்.) இதில் விசித்திர விந்தை என்னவென்றால் வரலாற்றின் கற்களில் தன் ஆட்சியின் மகிமையை பொறிப்பதற்கான அவரது வேகத்தில் மோடி தன்னையறியாமல் பிரிட்டிஷார் தாங்கள் ஆட்சியிலிருந்தபோது சென்ற அதே பாதையிலே செல்கிறார்.

ஏகாதிபத்திய அதிகாரத்தின் பௌதீகச் சின்னமாக புதுடெல்லி பிறப்பெடுத்தது. இந்தியாவின் வைசிராயாக இருந்து அதன் நலன்களை மிகுந்த ஆர்வத்துடன் முன்வைத்த ஹார்டிங் பிரபு சொற்களில் கூறுவதானால், அது ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான உறுதிப்பாட்டின் அறுதியிடல்’ ஆகும். பிரிட்டிஷாரால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு 1857 சிப்பாய் கலகத்துக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் பேரரசோடு இணைக்கப்பட்ட பிறகு இந்தியாவின் தலைநகரமாக நியமிக்கப்பட்ட கல்கத்தா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பிறகு தன் பயன்பாட்டை இழந்துவிட்டது.

பிரிட்டிஷார் செய்வதறியாமல் பெங்காலி உள்ளூர்வாசிகளுக்கு நவீன தேசியவாத உணர்வை ஊட்டிவிட்டனர். அவர்களோ இப்போது சலுகைகளைக் கேட்கின்றனர். பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் இந்தியாவின் கிழக்கு கோடியிலிருந்து தலைநகரை டெல்லிக்கு மாற்றுவது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை பலப்படுத்தும் என்பது மட்டுமல்ல; டெல்லியிலிருந்து ஆட்சிபுரிந்த பல பெயர்பெற்ற உள்ளூர் ராஜபரம்பரைகளின் தகுதி வாய்ந்த வாரிசாக தன்னை பிரகடனப்படுத்த அது உதவும்.

டெல்லி பல பேரரசுகளுக்கும் ராஜபரம்பரைகளுக்கும் மயானமாக மாறியது என்ற எச்சரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை. கொல்கத்தாவில் செழித்து வளர்ந்துகொண்டிருந்த வணிகச் சமூகத்திடமிருந்தே பெரும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 15 டிசம்பர் 1911 அன்று இந்தியாவில் காலடி பதித்த ஒரே பிரிட்டிஷ் பேரரசரான ஜார்ஜ் மன்னர் V அவர்கள் புதுடெல்லிக்கு அடிக்கல் நாட்டினார். பிரதான கட்டடக்கலை வல்லுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்வின் லுட்யென்ஸ் ஓரளவு குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை ஹெர்பர்ட் பேக்கர் பொறுப்பில் ஒப்படைத்தார். இருவரும் அவரவர் கருத்துகளுடன் இந்தியா வந்தனர். “இந்திய உணர்வுகளுக்கு இசைவாக” புது டெல்லி கட்டமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்த இந்த ஜோடியினர் மீது ஹார்டிங் பிரபு தனது மேலாண்மையைச் செலுத்தினார். “நாம் யாருக்காகக் கட்டுகிறோம், இந்தியர்களுக்காகவா அல்லது பிரிட்டிஷ் பொதுமக்களுக்காகவா?” என அவர் கேள்வியெழுப்பினார்.

Country Life என்ற பத்திரிகையில் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளைக் கண்டவரும் விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்தப்பட்டபோது வங்காளத்தில் வைசிராயாக இருந்த லைட்டன் பிரபு அவரது மாமனார் என்பதால் மிகவும் வலுவான தொடர்புகளைக் கொண்டவருமான லுட்யென்ஸ் அத்தகைய நிபந்தனைகளால் எரிச்சலுற்றார். இந்தியாவின் தொன்மையை அவர் போற்றாமலில்லை. “இயற்கைக்கு அப்பாற்பட்டவை குறித்த இந்தியாவின் உணர்வையும் விதிவழி சித்தாந்தத்துக்கும் நீடித்த பொறுமைக்கும் அது ஆற்றிய பங்களிப்பையும்” தனது பணியில் வெளிப்படுத்த விரும்பினார்.

ஆனால் இந்தியா குறித்து அவரிடமிருந்த பாராட்டு உணர்வோடுகூடவே இந்தியர்கள் குறித்து கணிசமான அருவருப்பையும் கொண்டிருந்தார். அவர்களது கட்டடக்கலையைக் கேலிசெய்தார். உள்ளூர்வாசிகளின் தாழ்ந்த அறிவுநிலை குறித்து வெறுப்பை உமிழ்ந்தார். “இந்தியர்களும் வெள்ளையர்களும் தங்குதடையின்றி கலந்துறவாடுவது” விரும்பத்தகாதது என அறிவித்தார். “அவர்களிடையே கலப்புத்திருமணம் அசிங்கமானது மற்றும் மிருகத்தனமானது” என்று கருத்து தெரிவித்தார். லுட்யென்ஸின் கோபத்துக்கு சோகமும் நகைச்சுவையும் கலந்த அவரது சொந்த வாழ்க்கை ஓரளவுக்குக் காரணம். அவரது துணைவியார் எமிலி தியோசோபிஸ்டுகளால் கவரப்பட்டார். இளம் இந்திய சித்தாந்தி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மீது மையல் கொண்டார். அவர் லுட்யென்ஸை ஒதுக்கினார், புலால் உண்ணாதவரானார், இந்திய சுயாட்சிக்காகப் போராடினார், காந்தியைப்போல ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணித்தார் மற்றும் இந்திய ரயில் நிலையங்களிலேயே படுத்துறங்கினார்.

முகலாயர் ஆட்சியின் நினைவிடமாக விளங்கும் பழைய டெல்லியின் மதில்சூழ் நகரமான ஷாஜஹானாபாதுக்கு நேரெதிரே ஒரு புதிய தலைநகரை நிர்மாணிக்க லுட்யென்ஸ் விரும்பினார். அப்படி உருவாக்கியிருந்தால் அது பல்வேறு இணைச்சமூகங்களின் மற்றும் கலாச்சாரங்களின் கலவையைக் கட்டாயமாக்கியிருக்கும். ஆனால் நோய் பரவல் குறித்த அச்சமும் போதிய இடமின்மையும் புதிய தலைநகரின் நிர்மாணத்தை அப்போது வெறிச்சோடிக்கிடந்த தென்டெல்லிக்குக் கொண்டு செல்ல வைத்தது. எந்த குடிமக்களைப் பிரமிக்க வைக்கும் நோக்கத்துடன் அதன் தோற்றம் வடிவமைக்கப்பட்டதோ அது இப்போது யமுனை நதியின் வெறிச்சோடியிருந்த கரைகளை எதிர்நோக்கியிருந்தது. இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் தாமதமாகவே இருந்ததால், இத்திட்டத்தைக் கைவிடுவதற்கான ஆலோசனைகளும் பெருகின.

முதல் உலகப்போர் வெடித்தது. அதிக செலவிலான இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பை வலுவடையச் செய்தது. லுட்யென்ஸ் வேறுசில திட்டங்களுக்கும் பொறுப்பேற்றிருந்ததால் இந்தியாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் ஒரு வசியசக்தியால் பீடிக்கப்பட்டவரைப் போல விடாமல் பணிபுரிந்தார். உலகப்போரில் வீழ்ந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் முகமாக லுட்யென்ஸால் வடிக்கப்பட்ட புகழ்பெற்ற நுழைவாயிலான இண்டியா கேட்டிலிருந்து (India Gate) தொடங்கி இரண்டு மைல் தூரத்திற்கு இருபுறமும் மரங்கள் நிறைந்த அகன்ற ஊர்வலப்பாதை அரசு இல்லம் வரை சென்றது. ரெய்சினா குன்றுகளின் சமதளப்படுத்தப்பட்ட 350 ஏக்கர் நிலத்தில் செம்பளிங்குக் கற்களால் வைசிராயின் அதிகாரபூர்வமான இருப்பிடமாக எழுப்பப்பட்ட இந்த மாளிகை நாகரிகங்களின் கலப்பின் அதிசயமாக விளங்கியது.

பரந்த முன்வாசற் கூடத்திலிருந்து தொடங்கி நான்கு மாடிகளில் பரந்திருந்த மிகவும் அலங்கரிக்கப்பட்ட 340 அறைகள் வரை மற்றும் அலங்காரமாகச் செதுக்கப்பட்ட தூண் உச்சிகளுக்குப் பதிலாக கல்லில் இந்தியக் கோயில் மணிகள் வடிவில் செதுக்கப்பட்ட சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட உச்சங்களைக் கொண்ட 277 இத்தாலிய டஸ்கன் பாணி கோபுரத் தூண்கள் வரை இந்த அரசு இல்லத்தை வடிவமைத்து கச்சிதமாக்க தன அறிவு மற்றும் ஆன்மாவின் ஒவ்வொரு துளியையும் லுட்யென்ஸ் அர்ப்பணித்தார்.

சாஞ்சியிலுள்ள புத்த ஸ்தூபம் மற்றும் ரோமாபுரியிலுள்ள பாந்தியன் (Pantheon) வழிபாட்டுத்தல மண்டபம் ஆகிய பாணிகள் கலந்த மைய கோபுரம் தாமிரப்பூச்சு வேலையுடன் தான் எந்தக் கட்டடத்தின் மணிமகுடமாக விளங்குகிறதோ, அந்த மாளிகையைவிட இருமடங்கு அதிக உயரம் கொண்டதாக அமைந்திருந்தது. இம்மாளிகை முன்பு அமைக்கப்பட்ட பரந்த 13 ஏக்கர் மொகலாயர் தோட்டம் (Moghul Garden) குறுக்குப்பாதைகளால் செதுக்கப்பட்ட செவ்வக பரப்புகளாக வடிக்கப்பட்டு நீர்ச்சுனைகள் நிரம்பிய கச்சிதமான ஜியோமிதிபடி உள்ள ஈடன் தோட்டமாக இன்றளவும் உள்ளது.

அது கட்டி முடிக்கப்பட்ட பிறகு லுட்யென்ஸுக்கு இருந்த முக்கிய சொந்த வருத்தம் என்னவென்றால் தாம் முன்புபோல ‘அதில் எங்குவேண்டுமானாலும் அலைய முடியவில்லையே’ என்பது தான். அது அவருடைய வாழ்நாள் பணியின் மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல. அது பிரிட்டிஷ் காலனியாட்சியின் மிகப்பெரும் தனியொரு பௌதீக சாதனையாகும். அதை முதலில் சுற்றிப்பார்த்த விமர்சகரான ராபர்ட் பைரன் இதற்கு நிகரான நவீன கட்டடமோ அல்லது புராதனக் கட்டடமோ எதுவும் இல்லை என்று கூறியது மிகையான கூற்று அல்ல. (அதன் ஆடம்பரத்தால் அதிருப்தியுற்ற மகாத்மா காந்தி அதை ஒரு மருத்துவமனையாக்க விரும்பினார். இந்தியக் குடியரசோ தன் குடியரசுத் தலைவரை இதற்குள் வசிக்க அனுப்பிவைத்தது.)

அரசு இல்லம் தன் இரு பக்கங்களிலும் ஹெர்பர்ட் பேகரால் வடிவமைக்கப்பட்ட செயலகக் கட்டடங்களைக் கொண்டிருந்தது. மகுடத்துடன் கூடிய சிவப்பு நிறத்திலான இந்தியக் கலாச்சார சின்னங்களுடன் கூடிய இக்கட்டடங்கள் அரசாங்கத்தின் முழுமை அரங்கத்திற்கு இருக்கும் ஒரு மரியாதை மற்றும் தனித்தன்மைக்கு ஒரு கட்டடக்கலை வெளிப்பாட்டை கொடுப்பதற்கான பேக்கரின் பேராசையிலிருந்து உருவாயின. அரசு இல்லத்துக்கு மட்டுமே என்று லுட்யென்ஸ் தனித்து ஒதுங்கியிருந்த அதே மேட்டுப்பரப்பிலேயே செயலகங்களும் நிறமிக்கப்படவேண்டும் என பேக்கர் கடுமையாக வாதாடினார். தனது சொந்த மகோன்னத படைப்பின் காட்சியை பேக்கரின் செயலகங்கள் மறைக்காது என்று அளிக்கப்பட உத்தரவாதங்களுக்குப் பதிலாக லுட்யென்ஸ் தனது கட்டடத்தை மேலும் பின்னுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவை அதை மறைக்கத்தான் செய்தன.

இதை மாற்ற வேண்டும் என லுட்யென்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் லண்டனால் நிராகரிக்கப்பட்டதால் “மாபெரும் கலைத்தவறு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் இதை அங்கீகரிப்பார்கள் எனவும் இதை நிகழ்த்தியவரை கண்டிப்பார்கள் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன்” என அவர் கோபத்துடன் பேகருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

நகரின் மைய அச்சாக விளங்கும் என எதிர்நோக்கப்பட்ட வைசிராய் மாளிகை கிட்டத்தட்ட பார்வைக்குப் புலப்படாமல் போனது. அந்த ஊர்வலப் பாதையிலிருந்து பார்த்தால் அதன் மகுடம் மட்டுமே தென்பட்டது. இந்த மையத்திலிருந்து அறுகோண வடிவில் வெளியே நீடித்த வழிப்பாதைகள் மாபெரும் சதுக்கங்களைச் சென்றடைந்தன. இந்தியாவின் சாதி அடுக்கு முறை பிரிட்டிஷாரின் வர்க்க அடுக்குடன் சேர்ந்து புதுடெல்லியை வடிவமைப்பதில் லுட்யென்ஸால் உள்வாங்கப்பட்டது.

இந்தப் பாதைகளின் இருமங்கும் பொதுப்பணித் துறையால் தோட்டங்களுடன் கூடிய பங்களாக்கள் கட்டப்பட்டன. அவற்றில் வசிப்பவர் யார் என்பதைப்பொறுத்து சில ஃபர்லாங்குகள் முதல் பல ஏக்கர்கள் வரையிலான பரப்பளவை அவை கொண்டிருந்தன. இந்த மொத்த கட்டுமானப் பணிக்கும் 10 மில்லியன் பவுண்டுகள் செலவாயின. அறிந்தோ அறியாமலோ நகரின் அமைப்பு முறையில் லுட்யென்ஸ் விசித்திரமானதோர் தரம் பிரிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். 1931இல் அதற்குத் தொடக்க விழா நடத்தப்பட்ட போது அதன் பரந்த உட்பகுதியில் கிட்டத்தட்ட வெள்ளையர்கள் மட்டுமே வசித்தனர். அதன் வெளிப்பகுதி இந்தியர்களின் வாழ்க்கை நிரப்பியிருந்தது.

இறுதியில் உள்நாட்டவர்களின் உணர்வை துண்டாடாமல் அதற்கு மேலும் வலுவூட்ட புதுடெல்லி அதிகம் செயல்பட்டது. “சுதந்திரம் மக்களை நோக்கி இறங்கி வருவதில்லை. சுதந்திரத்தை நோக்கி மக்கள் தங்களை தரமுயர்த்திக்கொள்ள வேண்டும்” என அவரது செயலகங்கள் வாயிலில் பேக்கர் பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்தார். பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைந்தபோது தனது சொந்த கடந்தகாலத்திலிருந்து விடுபட்டு பிறரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் காலில் போட்டு மிதிபடுவதற்கும் இந்தியா எந்த அளவுக்குப் பழகிப்போயிருந்ததென்றால் வி.எஸ்.நைபால் ஒருமுறை குறிப்பிட்டபடி மத்திய காலத்தில் ஒரு பேரரசை சொந்தமாகக் கொண்டிருக்க ஒருவர் விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும், அங்கு “யாருக்கு வேண்டுமானாலும் ஒரு புதுடெல்லியை நிர்மாணிக்க உள்ளூர்வாசிகள் தயாராக இருப்பார்கள்”.

நாவலாசிரியர் மனு ஜோசப் கூறியது போல இந்தியாவின் புரதான கட்டடக்கலை பொக்கிஷங்கள் அலையலையாக நிகழ்ந்த காலனியாதிக்கத்துக்கு முந்தைய படையெடுப்புகளால் அழித்தொழிக்கப்பட்டன, எஞ்சியன இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் தீரத்தைப் பறைசாற்றியது. என்னதான் காட்டுமிராண்டித்தனமும் சூறையாடல் நிகழ்ந்தாலும் பிரிட்டிஷாரின் வருகையையடுத்துதான் இந்தியா புதுப்பிக்கப் பெறுவது தொடங்கியது. இந்திய தேசியவாதிகள் இதை மறுத்தனர். ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து கிடைத்த அறிவுஜீவித் தூண்டுதல் இல்லாமல் அவர்களுடைய இயக்கம் சாத்தியமாகியிருக்க முடியாது. சுதந்திரத்துக்கான மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கியவர்களுக்குச் செலுத்திய மிகவும் விரிந்த காணிக்கையாகும்.

இந்தியாவுக்குத் திட்டவட்டமான ஒரு மையத்தைக் கொடுப்பதன் மூலம் இந்திய ஒற்றுமைக்கு புதுடெல்லி அடிக்கல் நாட்டியது. “பல நூற்றாண்டுகள் காலகட்டத்தில் இந்தியாவின் அனைத்து இனங்களையும் மதங்களையும் புதிய தலைநகரம் ஒற்றுமைப்படுத்தியது” என்று பேக்கர் பெருமைபீற்றிக்கொண்டது வெறும் தம்பட்டமல்ல. புதுடெல்லி இந்தியாவைத் தன்னை நோக்கி இழுத்தது. வாஷிங்டன் டி.சி தவிர உலகின் வேறெந்த தலைநகரமும் அளவிலும் அற்புதத்திலும் அதோடு போட்டிப்போட முடியாது. அப்படி போட்டியாக ஒன்று வரும் என்று எண்ணிப்பார்ப்பது கூட எந்த அளவுக்கு அசாதாரணமானது என்றால் பேக்கர் லுட்யென்ஸிடம் கூறியது போல :கொடுங்கோன்மை ஆட்சி ஒன்றின் கீழ் தான் இது சாத்தியமாகும். இதைக் கட்டிமுடித்தது பிரிட்டனின் வாய்ச்சவடாலுக்கும் இந்தியாவில் பிரிட்டன் நடந்துகொண்ட முறைக்குமிடையிலான முரண்பாட்டை தெளிவுபடுத்தி காலனியாட்சியின் அழிவைத் துரிதப்படுத்தியது. நகரத்தின் நிர்மாணத்தின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றமும் முடியாட்சியின் அதிகாரம் படிப்படியாக தகர்ந்து போனதற்கு இசைவாக இருந்தது. காலனியாதிக்க சக்தியிடமிருந்து அவர்கள் கைக்கொண்ட மொழியிலேயே தேசியவாதிகள் பிரிட்டனை சவாலுக்குள்ளாக்கினர். புதுடெல்லி பிறந்து 16 ஆண்டுகளிலேயே பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேற நேர்ந்தது.

வெறும் தற்பெருமையிலே கணக்கிடப்பட்டு கொடுங்கோன்மை முறையில் அமல்படுத்தப்பட்ட புதுடெல்லி பிரிட்டிஷ் வெளியேறிய பிறகு மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக பரிசோதனைகளிலேயே மிகவும் துணிச்சலான பரிசோதனைக்கான சோதனைக்களமாக மாறியது. இந்நகரம் பௌதிக ரீதியில் மெல்ல மெல்ல சீர்கெட்டதோடுகூடவே அக்கம்பக்கமாக இந்நகரம் இந்திய மனோநிலையில் தனது கவுரவத்தை இழந்து அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட நேரு – காந்தி பரம்பரை தலைமை தாங்கிய பிரமாண்ட ஊழல் மடிந்த காங்கிரஸ் நிறுவன அமைப்பிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாததாகியது.

இந்தியக் குடியரசோடு சம்பந்தப்பட்ட உன்னதமான விஷயங்கள் அனைத்தையும் ஒருகாலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய “லுட்யெனின் டெல்லி” படிப்படியாக அதன் அசிங்கங்கள் அனைத்தையும் சித்திரிக்கும் ஒரு சொல்லாக உருமாறியது. அது, வாஷிங்டனைப்போல தார்மிகச் சீரழிவைச் சித்திரிக்கும் ஒரு சொல்லாக மாறியது. அதை மிகவும் வன்மத்துடன் கண்டித்த அரசியல்வாதிகளே அதைப் பேராசையுடன் விரும்பினர்.

ஆங்கிலோ – இந்திய எதிர்கொள்ளலின் மிச்சசொச்சங்களை “லுட்யென்ஸ் டெல்லியிலிருந்து” அறவே நீக்குகிறேன் என்ற வாக்குறுதியுடன் அரியணை ஏறினார் மோடி. காலனியாதிக்கத்ததையடுத்த காலகட்டத்தின் பெரும்பகுதி காலகட்டத்தில் நாட்டை நடத்திச் சென்ற ஆங்கிலம் பேசும் இந்திய மேட்டுக்குடி சாதியினரால் அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு கலாச்சாரரீதியாக வெறுக்கப்பட்டு மானுடவியல் ஆச்சரியப்பொருளாக மாற்றப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் எறிந்த கைக்குண்டு மோடி. பல நூற்றாண்டுகளில் கட்டற்ற அதிகாரத்துடன் டெல்லியிலிருந்து இந்தியாவை ஆளப்பிறந்த முதல் இந்து தலைவராக, விதியின் ஒரு கருவியாக, மோடி தன்னைத்தானே பார்த்தார்.

ஆனால், அந்தகோ…தோற்கடிக்கப்பட்ட இந்தியாவை மீட்டெடுத்தவர் என்பதற்குப் பதிலாகச் சிதறிக்கிடந்த அதிருப்திகளின் சின்னம் என்பதற்கு அப்பாற்பட்டு தான் உயர்ந்தவரல்ல என அவர் நிரூபித்தார். தனது கையாலாகாத்தனத்தால் பொருளாதாரத்துக்கு வெடிவைத்து தான் அரங்கேற்றிய வேலையின்மை என்ற பேரழிவை மூடி மறைக்க கோரமான மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஜனநாயக உலகில் எங்கும் காணாத அளவுக்குத் தனிநபர் வழிபாட்டை உருவாக்குவதில் தனது சக்தியனைத்தையும் செலவழித்த தற்பெருமை கொண்ட அவசரக்குடுக்கையான தன்மீதே கவனம் கொண்ட நபரைவிட மேலானவரல்லர் என நிரூபித்தார்.

கடந்த ஆண்டு, பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புபவர்களின் எதிர்ப்பையும் மீறி புதுடெல்லியின் மத்திய பகுதியை மறுகட்டமைப்பு செய்ய டெண்டர்களைச் சமர்ப்பிக்கும்படி அவர் அழைப்புவிடுத்தார். இந்த 2.2 பில்லியன் திட்டத்தை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 2 மில்லியனுக்கும் குறைவாக ஆண்டு பிசினஸ் புழக்கத்தைக்கொண்ட கட்டடக்கலை வல்லுநர்கள் எவரும் விண்ணப்பிக்க முடியாது என அவர்களைத் தகுதியற்றவர்களானாக்கினார். இப்போதுதான் தொழிலைத் தொடங்கியிருக்கும் இந்திய லுட்யென் ஒருவரால் தனது ஆற்றலைக்காட்ட முடியாது.

பணப்புழக்கம் அதிகம் இருக்கும் அரை டஜன் கம்பெனிகள் முன்வைத்த திட்டங்களை அரசு சிறிதாகப் பட்டியலிட்டது. கண்கூசவைக்கும் அசிங்கமாக உள்ள இந்தத் திட்டங்கள் புதுடெல்லியை விரும்பும் எவரையும் அதிர்ச்சியடையவைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடக்கலைஞர் எழுந்து வரும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட India Gate-ஐ விட பல மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை இண்டியா கேட் பின்புறம் நிறுத்த வேண்டும் என முன்மொழிந்தார். மற்றொரு திட்டத்தில் முன்மொழியப்பட்ட “மகுட ஆபரணம்” புதுடெல்லியின் புதிய அடையாளச் சின்னமாக விளங்க இண்டியா கேட் பின்புறம் ஒரு அற்புத ஜோதியை நிறுவுவது.

இந்தப் பட்டியல் மேலோட்டமான ஒரு முயற்சி. மறுவடிவமைப்புக்கான இந்த கருத்து முன்வைக்கப்பட்ட மறுகணம் முதலே இந்த உயர்மதிப்பு காண்டிராக்ட் மோடியின் சக குஜராத்தியும் நீண்டகாலம் அவரோடு கூட்டாகச் செயல்பட்டவருமான பிமல் பட்டேலுக்கே கொடுக்கப்படும் என்பது வெளிப்படையான ரகசியமாக உள்ளது என புதுடெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டேலுடைய திட்டம் மெருகுடன் கூடிய முக்கோண வடிவத்திலான ஆயிரம் பேர் அமரக்கூடிய புதிய நாடாளுமன்றம் ஒன்றை இப்போதுள்ள கட்டடத்துக்கு எதிராகக் கட்டுவது; 1947க்குப் பிறகு கட்டப்பட்ட நிர்வாகக் கட்டடங்களை இடித்துத்தள்ளி அவற்றினிடத்தில் கல் முகப்பையும் கண்ணாடி மற்றும் ஸ்டீல் உள்ளமைப்பையும் கொண்ட, நூறாயிரம் அதிகாரிகளைத் தன்னகத்தே கொள்ளக்கூடிய, வரிசையான பல செயலகங்களை இந்தியா கேட்டிலிருந்து ரெய்சினா ஹில் நோக்கி செல்லும் வழி நெடுக இருபக்கமும் கட்டுவது மற்றும் சுரங்க ரயில் முறையில் இந்தக் கட்டடங்களை இணைப்பது.

இப்போதுள்ள நாடாளுமன்றமும் செயலகங்களும் அருங்காட்சியகங்களாக மாறும். மோடிக்கு ஒரு புதிய மாளிகை — இது ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தில் இல்லை; அது ஆமோதிக்கப்பட்டபிறகு சந்தடியின்றி சேர்க்கப்பட்டது — லுட்யெனின் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அடுத்தபடியாகக் கட்டப்படும். குடியரசுத் துணைத்தலைவரின் இல்லமாக மற்றொரு கட்டடம் அந்த குடியரசுத் தலைவர் வளாகத்துக்குள்ளேயே கட்டப்படும். “இந்த அற்புத அடையாளக் கட்டடங்கள் குறைந்தது 150-200 ஆண்டுகளுக்காகவாவது ஒரு பாரம்பரியமாக விளங்கும்” என்று மோடி அரசு கூறுகிறது. எந்த கட்டடங்கள் இடிக்கப்படும்; எவை நீடிக்கும் என ஒரு குறுகிய வட்டத்திற்கு வெளியே எவருக்கும் தெரியாது. டெல்லியை உலகப் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்கவேண்டுமென யுனெஸ்கோவுக்கு டெல்லி செய்திருந்த விண்ணப்பத்தைத் திரும்பப்பெறுவதற்கான மோடியின் 2015 ஆண்டு முடிவின் பொருள் என்னவென்றால் அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தாலும் எதற்குமே பாதுகாப்பில்லை என்பதாகும். உறுதியாகத் தெரிவது என்னவென்றால் 2022 வேனிற்காலத்தில் இந்தியாவுக்கு 75 வயதாகும்போது நாடாளுமன்றம் புதியதொரு கட்டடத்தில் கூடும் என்பதும் அது மோடியின் ஆட்சிக்கு ஒரு நினைவகமாக விளங்கும் என்பதுமே.

சமீபத்தில் ஒருநாள் மாலையில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்த டூரிஸ்டுகள் வார் மெமோரியல் (War Memorial) அருகே குவிந்திருந்தனர். குடும்பங்கள் கெட்டியான குளிர்கால கோட்டுகளை அணிந்துகொண்டு ஊர்வலப்பாதையின் இரு பக்கங்களிலும் பிக்னிக்கில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மங்கிய பனிமூட்டம் கவிந்த அந்த மேட்டு நகரம் இந்திய மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட, இந்திய உபகண்டத்து மண்ணிலிருந்து எழுப்பப்பட்ட, கட்டமைப்பாகத் தென்படவில்லை. அது விரைவிலேயே அலங்கோலப்படுத்தப்படும் என்பது ஒரு புனிதக் கேடான செயலாக தென்பட்டது.

டெல்லியை மறுகட்டமைப்புக்குள்ளாக்க வேண்டுமென்ற கருத்தை முதலில் விதைத்த வாஸ்து ஆலோசகரான பன்சாலிடம் புதிய முக்கோண நாடாளுமன்றத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நான் கேட்டேன். அது அழிவுமிக்க கருத்து என்றார் அவர். “வட்டங்களைவிட முக்கோணங்கள் மோசமானவை. அவை நெருப்பைச் சுட்டிக்காட்டுகின்றன”. அவை எல்லாவற்றையும் கொளுத்திவிடும். முஸ்ஸோரியில் தங்கள் வீட்டை முக்கோணங்களாக பங்குபோட்டுக்கொண்ட இரு பணக்கார சகோதரர்கள் பற்றி அவர் என்னிடம் கூறினார். இவ்விருவரின் ஒருவர் தனது எல்லா பணத்தையும் இழந்தார், மற்றவரோ புதிய கட்டடத்திற்குள் சென்ற பிறகு பக்கவாதத்தால் விழுந்தார்.

மோடிக்கு இதுபோல் ஏதோ நிகழ்கிறது. கொரோனா வைரஸ் பரவும் முன்னரே ஒரு முழு தலைமுறையின் நம்பிக்கைகளை மூழ்கடிக்கச் செய்யும் ஒரு கட்டத்துக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. பிரதமரின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வெடித்தது. கடந்த வேனிற்காலம்வரை உலகில் பெரிதாகப் போற்றப்பட்ட மோடி ஒரு பஞ்ச் லைன் வசனமாகக் குறைக்கப்பட்டார். டெல்லி கதையை முடிப்பது என்ற அவரது கனவுபடி அவர் செயல்பட ஆரம்பிக்கும் முன்னரே டெல்லி அவர் கதையை முடிப்பதாகத் தெரிகிறது.

**தமிழில்: பா.சிவராமன்**

நன்றி: [தி க்ரிடிக்](https://thecritic.co.uk/issues/april-2020/modis-ghastly-delhi-dream/)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *