Hஜி.எஸ்.டி வரிகள் ,உயர்கிறதா?

Published On:

| By admin

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இப்போது 5%, 12%, 18%, 28% ஆகிய அளவுகளில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப் பட்டு வருகிறது. இந்த வரி விகிதங்களில் 3 மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதுவரை வரிவிலக்குப் பட்டியலில் உள்ள பல பொருட்களுக்கு 3% வரி விதிக்கப்படவுள்ளது; 5% வரி பட்டியலில் உள்ள சில பொருட்களின் மீதான வரி 3% ஆக குறைக்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள பொருட்களுக்கான வரி 8% ஆக உயர்த்தப்படவுள்ளது. அதேபோல், 12% வரி நீக்கப்பட்டு, அதில் உள்ள பெரும்பான்மையான பொருட்கள் 18% வரி பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்பதை இன்று ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் ராமதாஸ்.

மேலும் அவர், “இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களாலும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95% என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தற்போது 5% ஜி.எஸ்.டி வரி பட்டியலில் உள்ள சமையல் எண்ணெய், தேயிலை, காபித்தூள், இன்சுலின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள், உரங்கள் ஆகியவற்றின் மீதான வரி 8% ஆக உயர்த்தப்பட்டாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப் பட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட போது, 2015-16 ஆண்டின் வருவாயை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் வரி வருவாய் 14% உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு நிர்ணயித்திருந்த ஐந்தாண்டு காலம் நடப்பாண்டுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், இனி இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு மறுத்து விட்டது. அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு கட்டவே இந்த இமாலய ஜி.எஸ்.டி வரி உயர்வை ஜி.எஸ்.டி குழு அறிவிக்கவுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளின் வருவாய் இழப்பை மத்திய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share