ஆளுநர் அஞ்சல் துறை வேலையைக்கூடச் செய்யவில்லை: ஸ்டாலின்

Published On:

| By admin

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், “தமிழ் இனத்தின் எழுச்சியைத் தடுக்க பார்க்கிறார்கள். அனைவரும் படிப்பதற்குத் தடை போடப் பார்க்கிறார்கள். அப்படித் தடை எழுப்புவதற்குத் தீட்டப்பட்ட சதித்திட்டம்தான் நீட், புதிய கல்விக்கொள்கை, மாநில உரிமைகள் பறிப்பு ஆகும்.
இந்த சதித்திட்டங்களின் பின்னணியை விளக்கித்தான் இந்தப் பிரச்சார பெரும் பயணத்தை ஆசிரியர் கி.வீரமணி மேற்கொண்டார். நுழைவுத் தேர்வு முறைக்கே 2006ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர். நீட் தேர்வு முறையை 2013ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரை நீட் தமிழகத்துக்குள் நுழையவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை நீட்டை நுழையவிடவில்லை. ஆனால், இருண்ட கால ஆட்சியைக் கொடுத்த – கெடுத்த இரட்டையர்கள் ஆட்சிக்காலத்தில்தான் நீட் நுழைந்தது, மாநில உரிமைகளை எல்லாம் அடகு வைத்தார்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் நீட் தேர்வு மசோதாவைச் சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்ததையும், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பிரதமர், ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்த நீட் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. நாம் கேட்பது இந்தச் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள் என்றுதான். ஆசிரியர் சொன்னதுபோல, போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும். ஆனால் சட்ட முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறை வேலையைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
8 கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால் – நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களைவிட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதிலிருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.
பிரதமர் மோடியே குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, ஆளுநர் இப்படி நடந்துகொண்டால் இப்போது முட்டுக் கொடுக்கின்ற மாதிரிதான் அப்போது முட்டு கொடுத்திருப்பாரா? பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இப்படி அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கிறார்களா என்று கேள்விகளை எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், “இன்று (நேற்று – ஏப்ரல் 25) காலை கூட பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கே உண்டு என்ற வகையில் ஒரு சட்டமுன்வடிவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு தான், இந்தக் கூட்டத்துக்கே நாங்கள் வந்திருக்கிறோம்.
நீட் தேர்வில் நாடகம் நடத்தியதுபோல், இந்தச் சட்டமுன்வடிவிலும் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து இன்றைக்கு மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்” என்றார்.
“நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல அது மருத்துவக் கல்வி என்பதை உயர் வர்க்கத்தின் கல்வியாக மாற்ற நினைக்கிற தேர்வு. அதனால்தான் இது ‘நவீன அறிவுத் தீண்டாமை’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டேன்.
புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களைப் பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்வி நிலையாகத்தான் மாறப் போகிறது. ஆனால் அது நிச்சயமாக நடக்காது. இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது என்பதெல்லாம் கட்டுக்கதைகளை நம்பி வாழ்ந்த பழமைவாத காலம்.
‘எனது இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்குக் காலதாமதம் ஆகலாம். ஆனால் இறுதி வெற்றி எனக்குத்தான்’ என்று பெரியார் சொன்னார். இத்தனை ஆண்டுக் காலமாக அந்தப் பழமைவாதத்தை எதிர்த்து நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அவர்களது சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம். இதில் இறுதி வெற்றி, உறுதியாகச் சொல்கிறேன், நமக்குத்தான். அத்தகைய நம்பிக்கையுடன் நாம் போராடுவோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share