பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது, கலந்தாய்வு எப்போது என்பது தொடர்பாக உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூன் 8) அறிவித்தார்.
பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2022ல் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் அதிக மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்த காரணத்தால் இவை பற்றி எல்லாம் ஆராயப்பட்டது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் 631 இடங்களும், அதற்கு முந்தைய ஆண்டு 750 இடங்கள் காலியாக இருந்தன.
இதற்குக் காரணம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துவிட்டு மீண்டும் நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரி அல்லது மாற்றுக் கல்லூரிகளுக்குச் செல்வதால் இந்த இடங்கள் காலியாகவே இருந்துவிடுகிறது.
எனவே நீட் தேர்வு முடிவு வந்த பிறகு தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
அதன்படி வரும் ஜூன் 20-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19 இறுதி நாள்.
20.7.2022 முதல் 31.7.2022 வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு சேவை மையம் மூலமாக நடைபெறும். 08.08.2022 அன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16 அன்று பொறியியல் கலந்தாய்வு தொடங்கி ஆகஸ்ட்19 ஆம் தேதி வரை முதல் 4 நாட்கள் மாற்றுத்திறனாளிகள்,
விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குக் கலந்தாய்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் துணை கலந்தாய்வு நடைபெறும். விடுபட்டவர்களுக்கான கலந்தாய்வு எஸ்சி பிரிவினருக்கு ஆகஸ்ட் 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
அதுபோன்று, ஜூன் 27 முதல் கலைக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 15ஆம் தேதி இறுதி நாளாகும், ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு எனத் தனிக் குழு அமைக்கப்படும்” என்று கூறினார்.
**-பிரியா**