Hதிமுக அணியை நோக்கி தேமுதிக

Published On:

| By admin

கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் இயக்கமான தேமுதிக, சமீப நாட்களாக திமுகவின் மீதான திமுக அரசின் மீதான விமர்சனங்களை ஒரு பக்கம் செய்தாலும் பாராட்டுக்களையும் வரவேற்புகளையும் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நேற்று ஏப்ரல் 15ஆம் தேதி தேமுதிக விடுத்த கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி வருவதாக திமுக அரசுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.

“உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், எதிர்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கியதை தேமுதிக வரவேற்கிறது” என்று சுட்டிக் காட்டியுள்ளார் விஜயகாந்த்.

மேலும், “அதேபோல் தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார மந்தநிலையில் சிக்கி தவிக்கும் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க, இதுவே சரியான தருணம் என்பதால் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் முடிந்த மறுநாளே, கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்பதே தமிழக அரசின் முதன்மையான குறிக்கோள் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையில் அறிவித்ததை தேமுதிக மனமுவந்து வரவேற்கிறது.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, எனது ஆணைக்கிணங்க, விருதுநகரில் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் எதிரொலியாக குற்றவாளிகளில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது”
என்று முக்கியமான மூன்று விஷயங்களில் திமுக அரசின் அணுகுமுறையை வரவேற்று இருக்கிறார் விஜயகாந்த்.

இது குறித்து தேமுதிக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசியபோது, “கடந்த 2011 முதல் அதிமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி, அமமுக என்று பல்வேறு கூட்டணிகளில் பயணித்து தேமுதிக இப்போது தனது பழைய செல்வாக்கை இழந்து நிற்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறுவதை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் கட்சிக்கு ஒரு சில எம்.பி.க்களாவது கிடைப்பார்கள் என்பது அவர்களின் கணக்கு.

இதைப் புரிந்து கொண்டுதான் சமீப நாட்களாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரேமலதா. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் வகை பாதுகாப்பு கொடுக்கப்பட்ட போது, இரண்டு ஆடும் இரண்டு மாடும் வைத்திருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் பிரேமலதா.

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற அமித்ஷாவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார் விஜயகாந்த்.

சொத்து வரி உயர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், திமுக அரசை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்றும் திமுக அரசின் நன்மைகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும் என்றும் பிரேமலதா நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த அரசியல் போக்கின் விளைவாக, வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக இதுவரை இடம்பெறாத திமுக கூட்டணியில் இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை” என்கிறார்கள்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share