}மூன்றாம் அலையைச் சமாளிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு!

Published On:

| By Balaji

கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில்  அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், மூன்றாம் அலையைச் சமாளிக்க அரசு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை வரலாம்,  டெல்டா பிளஸ் வேரியண்ட் மூன்றாவது அலையாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் , இந்த வைரசைக் கண்டறியத் தமிழகத்தில் ஆய்வகம் அமைப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துவது, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிப்பது போன்றவற்றைத் தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ இன்று வரை  முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு  353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும்,

இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்டிபிசிஆர் கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share