கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட முன் வடிவை இன்று (ஜனவரி 7) தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார்.
இதன்படி தமிழகத்தில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலம் ஐந்து வருடங்களில் இருந்து மூன்று வருடமாக குறைக்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுதும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக திமுக அப்போது குற்றம் சாட்டியது.
மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில்,ஆட்சிக்கு வந்ததும் ஆய்வு செய்ததில் பெரும்பாலான கடன்கள் தவறான நபர்களுக்கு மோசடியாக வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அண்மையில் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகளைக் களைய கூட்டுறவு சங்கங்களைக் கலைப்பதற்கு முடிவெடுத்தது திமுக அரசு. அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைத்தல் என்பது சட்ட சிக்கலாகிவிடும் என்பதால், 2018 இல் பதவியேற்று ஐந்தாண்டுகள் அதாவது 2023 வரை பொறுப்பில் இருக்கும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தைக் குறைத்து சட்டம் இயற்ற முடிவெடுத்தது அரசு.
அதன்படி இன்று, ‘2018 இல் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை மூன்றாண்டுகளாக குறைத்து திருத்த சட்ட முன் வடிவை கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அதன்படி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நண்பரான இளங்கோவன் முதல் அனைத்து கூட்டுறவு சங்க பொறுப்பாளர்களின் பதவிக் காலமும் 2021 ஆண்டோடு முடிந்துவிட்டன. விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் புதிதாக நடைபெற இருக்கின்றன.
கூட்டுறவு சங்க திருத்த முன் வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
**-வேந்தன்**
�,