மோடியை புறக்கணித்த பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம்?

politics

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக சேகர்பாபு (திமுக), வினோஜ் பி செல்வம் (பாஜக), எம்.ஏ.கிச்சா ரமேஷ் (AISMK), சே ப முகம்மது கதாபி (நாதக), பி.சந்தானகிருஷ்ணன் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

2016ல், திமுக வேட்பாளர் சேகர் பாபு, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசனை 4836 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு போட்டியிடுகிறார். இவரை விமர்சித்து,வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எழும்பூரைச் சேர்ந்த இளைஞரணி பிரமுகர் வினோத் குமார் என்பவர் மூலமாக, தொகுதிக்குள் சேகர்பாபு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், இதன்மூலம் வியாபாரிகளை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது அந்த வீடியோ. சேகர் பாபுவை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வைரலாக்குவதால், தொகுதி அதிரிபுதிரி ஆகியிருக்கிறது.

இந்த நிலையில், சேகர்பாபுவிடம் இந்த வீடியோ எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, “தோல்வி பயத்தில் வெளிறிப் போயிருக்கும் பா.ஜ.க-வினர் இதுபோன்ற ஆதரமற்றக் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். என்மீது, கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, மிரட்டி பணம் பறித்ததாகவோ எந்த வழக்கும் இல்லை. தேர்தல் நேரத்தில் இப்படியான பொய்ப் புகார்களைக் கிளப்பிவிட்டால், வாக்காளர்கள் குழம்பிவிடுவார்கள் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ.க தரப்பு. ஆனால், வாக்காளர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி வரியை விதித்து, வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய பா.ஜ.க-வை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால்தான், தங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்” என்றவரிடம், “பா.ஜ.க வேட்பாளர்கள் சிலர் தங்கள் கட்சியின் தலைவர்கள் படத்தையே புறந்தள்ளிவிட்டு பிரசாரம் செய்கிறார்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிடும் வினோஜ் செல்வம் கூட இப்படி விளம்பரம் செய்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”என கேட்டபோது

“மோடி, அமித் ஷா படம் போட்டால் ஓட்டு வராது என்பதை பா.ஜ.க வேட்பாளர்களே உணர்ந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு மக்களிடம் கோபம் கனலாகக் கொதிக்கிறது. பா.ஜ.க வேட்பாளர்களுடன் பிரசாரத்துக்குச் செல்லும் அ.தி.மு.க-வினர், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் கொடியை கையால் கூடத் தொடுவதில்லை. ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று பா.ஜ.க-வினர் முழங்கினால், பதிலுக்கு அ.தி.மு.க-வினர் முழங்குவதில்லை. இந்த முரண்பாட்டை என் தொகுதியிலும் நான் பார்க்கிறேன். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘மோடியா, அல்லது இந்த லேடியா’ எனக் கேட்ட ஜெயலலிதாவின் வார்த்தைகளை, இன்றுள்ள அ.தி.மு.க தலைவர்கள்அடகுவைத்துவிட்டதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் பார்க்கிறார்கள். துறைமுகம் தொகுதிக்குள் 177 பாகங்கள் வருகின்றன. வாக்குச்சாவடியில், பாகத்திற்கு இரண்டு பேர் வீதம் 354 பேரை நியமிக்கக் கூட பா.ஜ.க-விடம் ஆட்கள் இல்லை. அ.தி.மு.க-வினரை நம்பியிருக்கும் சூழல்தான் நிலவுகிறது” என்றார்.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்க உரிமையாளரான வினோஜ் செல்வம் பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் வளர்ப்பு. நீண்ட போராட்டத்துக்கு பின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். இந்த தொகுதியில் பாஜகவுக்கு அடிப்படை கட்சி கட்டமைப்பு இல்லாததால் அதிமுகவினரை நம்பி தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டி உள்ளது.

தேர்தல் கருத்துகணிப்புகள் அதிமுக அணிக்கு எதிராக வந்து கொண்டிருக்கும் சூழலில் இதற்கு காரணமான பாஜக கட்சி வேட்பாளரை வெற்றிபெற நாம் ஏன் உழைக்க வேண்டும் என்கிற மனோநிலை அதிமுக அடி மட்ட தொண்டர்களிடம் துறைமுகம் தொகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்கின்றனர்.

ஜெயலலிதாவின் விசுவாசிகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் வேட்பாளர்களாக தொகுதிக்குள் முடங்கிப் போய்விட்டனர். மேலும், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 21 அமைப்புகளின் நிர்வாகிகள் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பா.ஜ.க-வின் வியூகத்தை உடைத்திருக்கிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *