உத்திரபிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலித் பெண்ணின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் அக்டோபர் 1 ஆம் தேதி தாக்குதல் நடத்திக் கைது செய்தனர்.
ராகுல் காந்தியை போலீசார் சுற்றி வளைத்து தோள்பட்டையின் மீது நெஞ்சின் மீது கை வைத்து தள்ளுவதும் அதனால் ராகுல்காந்தி கீழே விழுவதும் வீடியோ காட்சிகளாக இந்தியா முழுவதும் பரவின.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய காங்கிரசார் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது.
.இந்த தகவல் கிடைத்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரசார் உடனடியாக மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சத்தியமூர்த்தி பவன் வாசலில் அந்தப் பெண்ணின் உருவப் படத்தை பிரம்மாண்டமாக பிளக்ஸ் வைத்த காங்கிரஸார் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் தீப்பந்தங்களோடு போராட்டம் நடத்திய காங்கிரஸார், ‘யோகி போலீசின் அராஜகம் ஒழிக’ என்று கோஷமிட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் கடுமையான வார்த்தைகளில் கோஷமிட்டனர்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போலீசார் கே எஸ் அழகிரி உள்ளிட்டோரை கைது செய்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அங்கிருந்து தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களோடு வீடியோ காலில் பேசிய கே.எஸ். அழகிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் ராகுல் காந்தியின் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்குமாறு முடுக்கிவிட்டார்.
திருச்சியில் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில் நடந்த போராட்டம், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்த போராட்டம், கரூரில் எம்பி ஜோதிமணி தலைமையிலான போராட்டம் என தமிழகம் முழுதும் வீடியோ காலில் காங்கிரஸாரோடு பேசி போராட்டம் பற்றி கேட்டறிந்தார்.
உத்திரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்ட காட்சி தமிழகத்தில் சில மணி நேரங்களில் காங்கிரசாரை போராட்டம் செய்ய வைத்துவிட்டது,
**-வேந்தன்**
�,”