மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இரண்டு உத்தரவுகளில் ஒன்றை செயல்படுத்திவிட்டார் முதல்வர் எடப்பாடி. இன்னொரு உத்தரவுக்கும் கட்டுப்படுவாரா, மாட்டாரா என்ற கேள்வி அதிமுகவின் சீனியர்கள் வட்டாரங்களில் சீரியசாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் தங்கமணியும்,ஜெயக்குமாரும் அவசரமாக டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர். தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி அமித் ஷாவிடம் விளக்கிய அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செய்தியையும் அமித் ஷாவிடம் தெரிவித்தனர்.
அதாவது, ‘சிஏஏ விவகாரம் மற்ற எந்த மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் அரசியலாகி வருகிறது. திமுக இதை வைத்து மிகப்பெரிய அரசியல் செய்து வருகிறது. திமுகவின் அரசியல் லாபத்தை தடுக்க வேண்டுமானால் சட்டமன்றத்தில் என்.ஆர்.சி. வேண்டாம் என்று ஒரு தீர்மானம் கொண்டுர வேண்டும்’ என்று எடப்பாடியின் மெசேஜை அவர்கள் அமித் ஷாவிடம் தெரிவித்தனர். ஆனால் அமித் ஷாவோ இந்த சட்டத்தில் எந்த அரசியலுக்கும் இடம் கிடையாது. அப்படி ஒரு தீர்மானத்தை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் அந்த சந்திப்பின் போதுதான் தமாகா தலைவர் வாசனுக்கு ராஜ்யசபா சீட் தரவேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.அமித் ஷாவின் ராஜ்யசபா உத்தரவையும், சிஏஏ உத்தரவையும் பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவும் முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து தனியாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமித் ஷாவின் இரு உத்தரவுகளில் ராஜ்யசபாவில் வாசன் என்ற உத்தரவை எடப்பாடி நிறைவேற்றிவிட்டார். அதேபோல சிஏஏ தீர்மான விஷயத்திலும் நடந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.
**-வேந்தன்**�,