சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கிய ஆவணம்? ஜெயக்குமார் மழுப்பல்!

Published On:

| By Balaji

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கான ஆவணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார்.

இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா விவகாரம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஜெயலலிதா காலத்திலேயே சசிகலா அதிமுகவில் உறுப்பினராக இல்லை. அவர் அதிமுகவில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று டெல்லியில் ஜனவரி 18 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனோ, “அதிமுகவுக்கு தற்போது வரை சசிகலாதான் பொதுச் செயலாளர்” என்று பதிலளித்திருந்தார்.

இதுபற்றி இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சரமாரியான கேள்விகளை எதிர்கொண்டார்.

“கட்சியின் விதிப்படி கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருப்பவரோ, பொறுப்பு வகிப்பவரோ கட்சிக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றாலே அவர்களது அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படும். கட்சி மாறிவிட்டாலும், வேறு கட்சி ஆரம்பித்தாலும் அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படும்” என்று சசிகலா பற்றி ஜெயக்குமார் கூறினார்.

அப்போது, “சசிகலாவை எப்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினீர்கள்? அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? ஓபிஎஸ் இபிஎஸ் கையெழுத்திட்ட அதற்கான ஆவணம் அதிமுகவிடம் உள்ளதா?” என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்க,

“அவரது அடிப்படை உறுப்பினர் பதவியே போய்விட்டது. அவருக்கு அமமுகவில் பொறுப்பு கொடுத்த பிறகு அவர் உறுப்பினராக இருக்க முடியாது. அவரை நீக்கவே தேவையில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒவ்வொருத்தராக நீக்க முடியுமா? அப்படி நீக்க முடியாது. இது மாதிரி வரும் என்று தெரிந்துதான் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போனால் அடிப்படை உறுப்பினர் பதவி போச்சு என்று தெளிவாக விதியில் இருக்கிறது. அது சசிகலாவுக்கு பொருந்தும்” என்றார் ஜெயக்குமார்.

ஆக சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கான எந்த பேப்பரும் இல்லை என்பதை ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share