கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்தனர். இதனால், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(ஏப்ரல் 26) நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறுகையில்,”சூழ்நிலையை சமாளிக்க வேறு வழி தெரியாததால்,நாளை(ஏப்ரல் 27) இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயங்கும். அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். நாளையில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். கடைகள் 10 மணிக்கு மேல் மூடப்பட்டுவிட்டால், காவலர்கள் தேவையில்லாமல் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது.
தனியார், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு, மதுபானம் உள்ளிட்டவை வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம். பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. அவசர தேவை தவிர, மாநிலத்துக்குள்ளேயும், பிற மாநிலங்களுக்கும் பயணிக்க அனுமதியில்லை.
சூழ்நிலை முற்றிலும் சரியில்லை.டெல்லி, மும்பையை விட மோசமான சூழ்நிலை நிலவுவதால் வேறு வழியின்றி ஊரடங்கு அறிவிக்கிறோம். கர்நாடகாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்,
மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு செய்தால், நம்மால் இலக்கை அடைந்துவிட முடியும்” என தெரிவித்துள்ளார்.
**வினிதா**
.�,