குரூப்-1 தேர்வு: 20% இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற உத்தரவு!

Published On:

| By Balaji

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு குரூப்-1 போட்டி தேர்வை நடத்தியது. இதற்கான பணி நியமனத்தில் தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு சலுகையை, தொலைநிலை கல்வியில் படித்தவர்களுக்கு வழங்காமல் நேரடியாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு சலுகையை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் குரூப்-1 தேர்வு முடிவுகளை மாற்றியமைத்து நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றினால் அதிகாரிகள் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த உத்தரவைச் செயல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் நேற்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி 2020ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள், மாற்றி அமைக்கப்பட்டால் அதிகாரிகள் நியமனத்தில் தாமதம் ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்குச் சேர்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share