�11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுகவின் அர.சக்கரபாணி தொடர்ந்த வழக்கில், ‘சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம்’ என்று சபாநாயகர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டதோடு, சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கினை முடித்துவைத்தது. சபாநாயகர் நல்ல முடிவினை எடுப்பார் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 20) ஸ்டாலின், “11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சபாநாயகருக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய சபாநாயகர் தனபால், “என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனது பரிசீலனையில் உள்ள விஷயத்தை அவையில் பேச முடியாது” என்று தெரிவித்தார். மேலும், 11 பேர் மீதான நடவடிக்கை பற்றி மு.க.ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “11 எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. நான் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்” என்று விமர்சித்தார்.
**த.எழிலரசன்**�,