தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளார்.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபோதிலும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுதொடர்பாக நீதிமன்றமே முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரர்களான சபாநாயகர், சட்டமன்றச் செயலாளர் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தரப்பிலிருந்தும், 11 எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்தும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. சபாநாயகர் தரப்பில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் தனபால் நாளை முதல் (ஆகஸ்ட் 27) தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக காணொலி மூலம் விசாரணை நடத்த இருக்கிறார்.
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 1ஆம் தேதி கடிதம் எழுதினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளிக்க வேண்டுமென 11 பேருக்கும் கொறடா எந்த உத்தரவையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். அந்தக் கட்டத்தில் 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்த நடவடிக்கை மன்னிக்கப்பட்டது என்றும் கூறினார்.
முதல்வர் எழுதிய கடிதத்தில் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் பதிலளிப்பார்கள். அதுபோலவே, தற்போது அதிமுகவில்தான் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்பதையும் அவர்கள் தெரிவிப்பார்கள். இதனை அடிப்படையாக வைத்து சபாநாயகர் இறுதி முடிவு எடுத்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**�,