11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு!

politics

சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதுபோன்று கட்சிகள் சார்பில் பணிகள் நடந்து வரும் நிலையில், மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

அதில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி, சென்னை மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆண், பெண் போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்குக் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.