தொடங்கியது பேருந்து சேவை: ரூ.1000 பாஸ் எத்தனை நாள் செல்லும்?

Published On:

| By Balaji

மே மாதம் வாங்கிய ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வகை மூன்றில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டு, 50 சதவிகித இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. அதுபோன்று மெட்ரோ ரயில்களும் இன்று முதல் இயக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாவட்டங்களில் 40 நாட்களாக இருசக்கர வாகனம், கார் மட்டுமே சென்று கொண்டிருந்த சாலைகளில் இன்று முதல் பேருந்துகளும் ஓட ஆரம்பித்துவிட்டன. காலையில் குறைந்த அளவிலேயே பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 9:30 வரை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 35 பணிமனைகளில் இருந்து முதற்கட்டமாக 1,400 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோன்று காஞ்சிபுரத்தில் 4 பணிமனைகளிலிருந்து 100 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “ ஏற்கனவே வாங்கப்பட்ட ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதிவரை செல்லும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என மூன்று வகையான இலவச பயண சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இலவச பயணத் திட்டத்தின் கீழ் அவர்கள் இந்த பயண சீட்டைப் பெற்றுக் கொண்டு பயணிக்கலாம். உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பயணம் செய்ய வேண்டும். மக்களின் வருகைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் இயக்கப்படுவதற்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். ”கடந்த ஒரு மாத காலமாக பேருந்து வசதி இல்லாமல் கஷ்டமாக இருந்தது. தற்போது பேருந்தும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுவதால் வேலைக்கு சென்று வருவது எளிதாக இருக்கிறது. பேருந்து இயக்கப்படுவதால், ஷேர் ஆட்டோவுக்கு கொடுக்க வேண்டிய காசு மிச்சமாகிறது. பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் அதை முறையாக பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share