100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்தது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே இயங்கி வந்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதாலும், கொரோனா குறைந்துவருவதால் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென திரைத் துறையிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகர் விஜய், நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகியவை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தார் விஜய்.
எனினும் ஜனவரி மாத தளர்வுகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் முதல்வருக்கு இதே கோரிக்கையை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால், 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உள் துறை செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு 5ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “திரையரங்குகள் 100 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளித்து ஜனவரி 4ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இது கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மத்திய உள் துறை அமைச்சகம் அளித்த 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்னும் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நீர்த்துப் போக செய்யக்கூடாது எனவும், அதனை பின்பற்ற வேண்டும் எனவும் விதி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
“100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
**எழில்**�,