nசசிகலா மீது அமைச்சர்கள் போலீஸில் புகார்!

Published On:

| By Balaji

அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளர் சசிகலா மீது தமிழக அமைச்சர்கள் இன்று (பிப்ரவரி 4) டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்கள்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை பெற்று ஜனவரி 31 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா. அங்கிருந்து ஓய்வெடுப்பதற்காக பெங்களூரு பண்ணை வீட்டுக்கு சசிகலா சென்றபோது தன் காரில் அதிமுக கொடியைக் கட்டியிருந்தார் சசிகலா.

இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. இந்நிலையில் அவர் அதிமுகவின் கொடியைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இது குறித்து சட்ட நடவடிக்கையை கட்சி மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் சென்றனர். சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 18 ஆம் தேதி டெல்லியில், “சசிகலா அதிமுகவில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று கூறியிருந்தார். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில்…சசிகலாவை தீவிரமாக எதிர்க்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி.

இந்தப் பின்னணியில்தான், இன்று பிற்பகல் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசிய எடப்பாடி, “இப்படியே விட்டால் வரும் 7ஆம் தேதியும் அந்தம்மா அதிமுக கொடிகட்டிதான் வருவாங்க. முறைப்படி டிஜிபி ஆபீஸ்ல புகார் கொடுங்க” என்று கூறியுள்ளார்.அதன்படியே அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? போன்ற கேள்விகளால் அரசியல் அரங்கம் அனல் வீசிக் கொண்டிருக்கிறது.

**வேந்தன்**i�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share