மக்களை ஏமாற்றுவதற்காக வேளாண் பாதுகாப்பு மண்டலச் சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ட பிரிவு மாவட்ட தலைவர் பரத்குமார் – ஜெயபிரியா ஆகியோரின் திருமணம் ஆற்காட்டில் உள்ள ஸ்ரீமதி கமலாமணி மண்டபத்தில் இன்று (மார்ச் 2) நடைபெற்றது. திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “டெல்டா பகுதியில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றால், அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரும். இது தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதுதான். மக்கள் மத்தியில், நாங்கள் சட்டம் கொண்டுவந்துவிட்டோம், மத்திய அரசுதான் கிடப்பில் போட்டுவிட்டது என்று பழிபோட்டு வாக்குகளை பெற முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமியின் தந்திரமான நடவடிக்கைதான் இது. தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார். பதவி வந்த மூன்று ஆண்டுகளாக அந்த விவசாயி தூங்கிக்கொண்டிருந்தாரா” என்று கேள்வி எழுப்பினார்.
சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று சொல்லும் திமுக, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரு சிறுபான்மையினரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லையே என்ற கேள்விக்கு, “மக்களை பாதிக்கும் எந்தத் திட்டத்திற்கும் பிள்ளையார் சுழி போடுவது திமுகதான். 2003 ஆம் ஆண்டு சிஏஏ திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை திமுக ஆதரித்தது. தற்போது தங்களது தவறை மறைக்க செய்யும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள். மக்களை ஏமாற்றும் தவறான நடவடிக்கைதான் இது” என்று விமர்சித்தார்.
**எழில்**
�,