கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவை, தடுப்பூசி வழங்கல் குறித்து தொடர்ந்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில், “ தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 18-45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். அதனால், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும். கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை வல்லுநர்கள் மூலம் ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
.�,