வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை மானியக் கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு 4 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 9 ஆம் தேதி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டமன்றக் கூட்டம் தொடங்கும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று (மார்ச் 2) நடைபெற்றது. அதில், கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், “சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும். முதல் நாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி முதல் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். மொத்தமாக 22 நாட்கள் வரை சட்டமன்றம் நடைபெறுகிறது. மார்ச் 9ஆம் தேதியைத் தவிர அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் நேரம் உண்டு” என்று தெரிவித்தார்.
**எழில்**
�,