சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு பாமகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சேலம் மாவட்டத்தில் உள்ள திரையங்குகளில் சூர்யா படத்தை வெளியிடக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார்.
ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி கலச காலண்டர் காட்சி நீக்கப்பட்டபோதும், பாமக ஓயவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்துக்கு சூர்யா அளித்த பதில் கடிதத்தால் பாமக தலைமை கொந்தளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்பிறகே வன்னியர் சங்கத்தையும் அக்கட்சி களத்தில் இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று பாமக மாவட்டச் செயலாளர் பேசியது, சூர்யாவும் ஜோதிகாவும் மன்னிப்புக் கோர வேண்டும், நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கமும் சூர்யாவுக்கு கெடு விதித்தது. இந்நிலையில் ‘ஜெம்பீம்’ படத்தில் வன்னியர்கள் அவமதிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியது.
இதன் தொடர்ச்சியாக சேலத்தில் சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடித்த படங்களை வெளியிடக் கூடாது என்று சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ. அருள், சேலம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “திரைப்பட நடிகர் சூர்யா நடித்து ஓ.டி.டி.யில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களைத் தவறாகச் சித்திரித்து உள்ளனர். இது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெரிதும் கொந்தளிப்பாக உள்ளனர்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் மற்றும் அந்த நடிகர் குடும்பத்தினரின் திரைப்படங்களை தயவு செய்து திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, அரசியல் கட்சிகள், ஜாதி, மத தலைவர்கள் இது போன்ற மிரட்டல்கள் விடுப்பது காலங்காலமாக நடந்துகொண்டுதான் உள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை தயாரித்திருப்பது தமிழ்நாடு ஆளுங்கட்சியின் மற்றொரு முகமான சன் பிக்சர்ஸ். அதனால் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதில் சிரமம் இருக்காது. பாமகவும் வேறு பிரச்சினை வந்தால் அவர்களது கவனம் அதில் திரும்பி விடும். அதனால் பெரிய நெருக்கடி எதுவும் இருக்காது என்றனர்.
**-அம்பலவாணன்**
�,