Qசிலம்பம் கற்றால் இடஒதுக்கீடு!

Published On:

| By Balaji

அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3% சதவிகித இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டையும் சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலை மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளின் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீடு, கடந்த ஆட்சியில் 3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

இந்தப் பிரிவில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் விளையாட்டை 3 சதவிகித இடஒதுக்கீடு கீழ் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டை சேர்த்து தமிழ்நாடு அரசு இன்று(நவம்பர் 18) அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள 46 விளையாட்டுகள் மற்றும் ஒலிம்பிக் அல்லாத 4 விளையாட்டுகளான ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ் கபடி மற்றும் வுஷு ஆகிய விளையாட்டுகளுடன், தற்போது சிலம்பமும், 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் சி.ஏ. பவானிதேவி (வாள்சண்டை), எ. தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி (தடகளம்), வி. சுபா (தடகளம்), மாரியப்பன் (தடகளம்) ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் சீரிய முயற்சியினால், ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share