ரெய்டு: விஜயபாஸ்கர் தொடர்புடைய அலுவலகத்துக்குச் சீல்!

Published On:

| By Balaji

சென்னையில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பொது ஊழியராக இருந்தபோது 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 27.22 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முழுவதும் மொத்தம் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும், 4.87 கிலோ தங்கம் உட்படச் சொத்து ஆவணங்கள், 19 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

ஆனால் என் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரின் நண்பரும் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளருமான சந்திரசேகருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிடச் சென்றுள்ளது. ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அதற்கு போலீசார் சீல் வைத்துச் சென்றனர்.

இதனிடையே அடுத்த ரெய்டு குறித்து நேற்று சூசகமாகப் பதிலளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. “தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே தற்போது ரெய்டு நடந்து வருகிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share