சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் மீது வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில சபாநாயகரை அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 21) கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். சபாநாயகர் சி.பி.ஜோஷி சார்பாக வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ஒரு முடிவு எடுக்காத நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. 2016ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநில சட்டமன்ற சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 19 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் பற்றி சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும். சபாநாயகரின் செயல்படுத்தும் அதிகாரத்தில் தலையிட நீதித் துறைக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை. அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே இப்போதைக்கு இந்த வழக்கு தேவையே இல்லை” என்று வாதாடினார்.
இன்று பைலட் சார்பாக வாதாடிய முகுல் ரோஹத்கி, “சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. பைலட் உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் சார்பாக புகார் கொடுத்த அன்றே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பு கொடுத்த புகாரில் உள்ள பத்திகளே சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிலும் உள்ளன. பதில் அனுப்ப குறைந்த அவகாசமே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு அவசரத்துக்கு என்ன அவசியம்? நோட்டீஸ் அனுப்புவதற்கான காரணங்கள் தெளிவாக பதிவு செய்யப்படவில்லை. கட்சிக் கொறடா என்பவர் சட்டமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குத்தான் புகார் கூற முடியும், சட்டமன்றத்துக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளில் கொறடாவின் பங்கு ஏதுமில்லை. எனவே இந்த நோட்டீஸ் சட்டப்படி செல்லாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், “இந்த மனு மீதான உத்தரவு வரும் ஜூலை 24 ஆம் தேதி வழங்கப்படும். அதுவரைக்கும் சபாநாயகர் தான் அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்” என இன்று தெரிவித்திருக்கிறது.
**-வேந்தன்**
[தகுதி நீக்கத்தில் சபாநாயகர் அதிகாரம்: தமிழ்நாடும் ராஜஸ்தானும்](https://minnambalam.com/politics/2020/07/20/35/speakers-power-on-disqualification-court-tamilnadu-rajastan)
�,