முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் மற்றும் அவரது உதவியாளர்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நேற்று அக்டோபர் 18 காலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை பற்றி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பொது ஊழியராக பணி புரிந்த 1-4 -2016 முதல் 31- 3 -2021 வரையிலான கால கட்டத்தில் தனது பெயரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தான் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் அளவில் சொத்து சேர்த்துள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில்… ஊழல் தடுப்புச் சட்டம் 2018 இன் படி அக்டோபர் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களின் வீடுகள் அலுவலகங்களில் அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் என மொத்தம் 50 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
. இந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் 4.87 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்கள் பதிவு சான்றிதழ் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் 19 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்….”இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது. நான் சோதனைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினேன். அவர்களும் கண்ணியமாக நடத்தினார்கள். ஆனால் என் பொது வாழ்க்கைக்கு களம் விளைவிக்கும் வகையில் சில செய்திகள் வெளிவருகின்றன. அண்ணா திமுக இதை எதிர் கொள்ளும். என் வீட்டில் இருந்து எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. இது பற்றி நான் விரிவாக பிறகு பத்திரிகைகளை சந்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
**-வேந்தன்**
�,”