நீட் சட்டம் போல வேளாண் மண்டலச் சட்டமா? தினகரன் சந்தேகம்!

Published On:

| By Balaji

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா அமமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்வுகளில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்டா பகுதியில் ஒஎன்ஜிசியின் 150க்கும் மேற்பட்ட எண்ணெய் குழாய் கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. அதுபோல கடந்த வருடம் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகத்தான் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த திட்டங்களுக்கு தடையில்லை என்பதுதான் தமிழக அரசின் சட்டம் சொல்கிறது. ஆகவேதான் ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்ள விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தடையில்லை என்று கூறிவிட்டு, டெல்டா பகுதிகளை எப்படி வேளாண் மண்டலமாக பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தினகரன்,

“அனைத்து திட்டங்களையும் ரத்து செய்தால்தானே அது உண்மையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டமாக இருக்கும். ஏற்கனவே நீட் தேர்வில் சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அதனை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியதைக்கூட இந்த அரசு மறைத்தது. அதுபோலதான் தற்போது கண் துடைப்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.போராடிய விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துவிட்டு தற்போது திடீர் ஞானோதயம் வந்து சட்டம் இயற்றியுள்ளனர். இது வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டுதான்” என்றும் சாடினார்.

அமமுகவின் அடுத்த இலக்கு என்ன என்ற கேள்விக்கு, “அதிமுகவை மீட்டெடுக்க துவங்கப்பட்ட ஜனநாயக ஆயுதம்தான் அமமுக என்னும் இயக்கம். தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. அதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம்” என்று பதிலளித்தார்.

**த.எழிலரசன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share