முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும்,எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டும் அதில் ஸ்டாலினை கேலி செய்யும்விதமாகவும் கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி இரவு கோவை முழுதும் ஸ்டாலினை கேலி செய்யும் போஸ்டர்கள் ஒட்டப்பட, 25 ஆம் தேதி காலையில்தான் இது பரபரப்பானது. துண்டுச் சீட்டு தலைமையா, தன்னம்பிக்கைத் தலைமையா என்ற வாசகங்களும் வடிவேலுவைப் போல ஸ்டாலினை சித்திரித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பல இடங்களில் இதை திமுகவினர் கிழித்தெறிந்தனர். அந்த போஸ்டர்களில் அச்சகக பெயர், அச்சடிக்கச் சொன்னவர் பெயர் என எதுவும் இல்லாததால் சில இடங்களில் போலீசாரே கிழித்தனர்.
ஆனால் ஆர்,எஸ்.புரம், குனியமுத்தூர் பகுதிகளில் திமுகவினருக்கும் போலீஸாருக்கும் எதிராக பிரச்சினை வெடித்தது. குறிப்பாக குனியமுத்தூர் காவல் நிலையம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டுக்கு அருகே இருக்கும் காவல்நிலையம். அங்கே போஸ்டர்களை கிழித்த திமுக இளைஞரணியினர் மீது வழக்குகள் போடப்பட்டன. இதையடுத்து காவல் நிலையத்தை திமுகவினர் முற்றுகையிட்டனர். அதன் பின் ஸ்டேஷன் ஜாமினிலேயே விட்டுவிட்டனர்.
தகவல் உதயநிதிக்குச் செல்லவும், இதற்காக ஒரு ஆர்பாட்டம் நடத்த வேண்டும், உடனடியாக நானே கோவைக்கு வருகிறேன் என்று முடிவெடுத்தார். சில மாதங்கள் முன் கோவை திமுகவின் நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டு தொடர்ச்சியாக அவர்கள் கைது செய்யப்பட்டபோது அவற்றைக் கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின், ‘இனியும் இது தொடர்ந்தால் நானே கோவை வந்து போராடுவேன்’ என்று கூறியிருந்தார். ஆனால் இம்முறை உதயநிதி நேற்று பிற்பகல் விமானத்தில் கோவைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.
நேற்று மாலை 4.50க்கு மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தனியார் ஹோட்டல் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று நடைபெறும் ஆர்பாட்டத்துக்கு கோவை திமுகவின் மாநகர், புறநகர் என ஐந்து மாவட்ட அமைப்புகள் சார்பிலும் பெருமளவில் இளைஞரணியினர் திரட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உதயநிதி.
அமைச்சர் வேலுமணியின் வீடு குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் குனியமுத்தூர் காவல்நிலையம் உள்ளது. முதலில் இளைஞரணியினர் உதயநிதி தலைமையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வதாகத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் குனியமுத்தூர் காவல் நிலையம் மீதும் உதயநிதிக்கு ஒரு கண் இருப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், குனியமுத்தூர் பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை முதலே கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர் மாநகரை நோக்கி குவியத் தொடங்கியிருக்கின்றனர்.
**-வேந்தன்**�,