ரேஷன் கடை பாமாயில்: பாதிக்கப்பட்ட மக்களின் நிலை?

Published On:

| By admin

திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி அருகே ரேஷன் கடையில் வாங்கிய பாமாயிலைப் பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டப் பொருட்கள் விநியோகப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் தரம் குறைவாக இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி அருகே உள்ள நொச்சியூரில் இயங்கி வரும் ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட பாமாயில் குறித்து எழுந்துள்ள புகார், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இங்குள்ள ரேஷன் கடையில் பாமாயில் வாங்கி சென்றுள்ளார். இந்த எண்ணெயைப் பயன்படுத்தி, சமைத்த உணவை சாப்பிட்ட நிலையில் இவரும், இவர் தந்தை மற்றும் சகோதரர் ஆகிய மூவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த விமலா என்பருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நான்கு பேரும் சித்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். நொச்சியூர் ரேஷன் கடையில் வாங்கிய பாமாயில் பேக்கிங்கில் இருந்த தேதி காலாவதியாகி இருந்ததாகவும், மேலும் அதில் லேசான மண்ணெண்ணெய் நாற்றம் அடித்ததாகவும் இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து பேசியுள்ள சரவணன், “மூணு நாள்களுக்கு முன்னாடி நொச்சியூர் ரேஷன் கடையில பாமாயில் வாங்கிக்கிட்டு வந்தோம். அந்த எண்ணெயைப் பயன்படுத்தி பூரி செஞ்சோம். அதை சாப்பிட்டப்ப, லேசான மண்ணெண்ணெய் வாசனை அடிச்சுது. அடுத்த கொஞ்ச நேரத்துல, வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு நான், என்னோட, அப்பா, தம்பி மூணு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றோம். அந்த பாமாயில் பேக்கிங்ல, தயாரிப்பு தேதி 30.12.2021-னு குறிப்பிடப்பட்டிருந்துச்சு, சமையல் எண்ணெயை அதிகபட்சம் மூணு மாசத்துக்குள்ள பயன்படுத்திடணும்ங்கற விதிமுறை. ஆனா, நொச்சியூர் ரேஷன் கடையில காலாவதியான பாமாயிலைக் கொடுத்திருக்காங்க. இந்த மாதிரி ஒரு தவறு நடக்குறதுக்கு முக்கிய காரணமே இங்க நடக்குற முறைகேடுதான். இந்த ரேஷன் கடையில, முடிஞ்ச வரைக்கும் பாமாயிலை பொதுமக்களுக்கு தராமல் பதுக்கி வெச்சிக்குவாங்க, வாய்ப்பு கிடைக்குறப்ப, ஹோட்டல்கள்ல விற்பனை செஞ்சிடுவாங்க. சில சமயங்கள்ல அதுமாதிரி விக்க முடியாமல் தேங்கி போனதை, பொதுமக்கள்கிட்ட கொடுக்குறாங்க. அதுமாதிரி காலாவதியான பாமாயிலைதான் எங்களுக்குக் கொடுத்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு’’ என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள திருவாரூர் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா, “பொதுமக்களிடம் எப்போதுமே பாமாயிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், உடனுக்குடன் விற்பனையாகிவிடும். இதனால் காலாவதியான பாமாயிலுக்கு வாய்ப்பே இல்லை. நொச்சியூர் ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட பாமாயிலை வாங்கி சமைத்து, உணவு சாப்பிட்ட நபர்களில் வேறு யாருக்கும், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பாமாயிலைப் பயன்படுத்தியதால் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லும் சரவணன் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தோம். பாமாயிலை ஊற்றி வைத்திருந்த பாட்டிலில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வந்தது. ஆனாலும் இந்த புகார் குறித்து அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்
இவரது விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் பேசியுள்ள சரவணன், “நாங்கள் பயன்படுத்திய பாக்கெட்டில் மட்டுமல்ல… திறக்கப்படாத நிலையில் உள்ள பாமாயில் பாக்கெட்டிலும் மண்ணெண்ணெய் வாசம் வருகிறது” என்று தெரிவித்தவர், “இதில் ஏதேனும் தவறுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை தமிழக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை மட்டுமே விநியோகம் செய்ய, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share