uசசிகலா மீது இன்றுவரை மரியாதை உள்ளது: ஓபிஎஸ்

politics

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் இரு நாட்களாக 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும், ஓ பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நேற்று காலை 11.30 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இருக்கும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஆஜரானார்.

இன்றைய விசாரணையின் போது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சையில் நடந்த இடைத் தேர்தலின்போது மருத்துவமனையில் இருந்தவாறு ஜெயலலிதா கட்சி வேட்பாளர்களுக்கான படிவத்தில் கைரேகையை வைத்தது எனக்குத் தெரியும். அவர் என்ன உணவு எடுத்துக் கொண்டார் என்று எனக்குத் தெரியாது. அவர் மரணம் அடைவதற்கு முன்னதாக டிசம்பர் 5ஆம் தேதி அவரை தான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதுபோன்று ஜெயலலிதாவுக்கு இதயத்திலிருந்த பிரச்சினை தொடர்பாக ஆணையம் கேள்வி எழுப்பிய போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சிகிச்சை தொடர்பாக ஏற்கனவே எனக்கு எதுவும் தெரியாது என்று ஓபிஎஸ் கூறிவிட்டதாலும், மருத்துவம் சார்ந்த கேள்விகளைக் கேட்கும் போது மருத்துவர்கள் உடனிருக்க வேண்டும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அப்பல்லோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

சசிகலா மீது உள்ள குற்றச்சாட்டைக் களைய வேண்டும் என்பதற்காக ஆணையம் அமைக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா என்று ராஜாசெந்தூர் பாண்டியன் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் சரிதான் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், “தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் இந்த கோரிக்கையை வைத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும்” என்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22.09.2016 முதல் 05.12.2016 வரையிலான கால கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது சரிதானா என்ற கேள்விக்கும், சரிதான் என்று பதில் அளித்துள்ளார் ஓபிஎஸ்.

சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா என்ற கேள்விக்கு, இன்றுவரை மரியாதையும் அபிமானமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, “நான் சொன்ன பதில் அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு நடந்த விசாரணை விவரங்கள் முழுவதுமாக வரவில்லை” என்று கூறியுள்ளார்.

2011-12 காலகட்டத்திலும், அதன் பின்னரும் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ மற்றும் அவரது குடும்பத்தினரோ சதித்திட்டம் தீட்டியதாக எந்தவித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டு சசிகலா தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு, “சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான்” என்று பதிலளித்தார்.

இன்றைய விசாரணையின் போது ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பற்றியும் தெரிவித்துள்ளார்.

“ஜெயலலிதா குற்றவாளி எனக் கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் என்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அதே சமயத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்ல வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

அப்போது நான் மிகுந்த துயரத்தில் அழுது கொண்டிருந்தேன். அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் தைரியமாக இருக்கவேண்டும். சென்னைக்குச் சென்று நான் சொன்னதைச் செய் என்று ஜெயலலிதா கூறினார்” என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக ஓபிஎஸிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு நிறைவடைந்துள்ளது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *