எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக இலக்கிய அணி சார்பில் இன்று (மார்ச் 3) ‘சொல்வோம், வெல்வோம்’ என்ற தலைப்பில் அக்கட்சியின் பேச்சாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எவ்வாறு எடுத்துச் சொல்வது என்று அறிவுரைகள் வழங்கினர்.
நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பேச்சாற்றல் வலிமையாக இருந்தால்தான் கட்சி வலிமை பெறும், ஆட்சியும் சிறக்கும். கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள்தான் பேச்சாளர்கள். கட்சியின் கொள்கைகளை முழுமையாகத் தெரிந்து மேடைகளில் பேச வேண்டும். ஏனெனில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு அவதூறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து விருதுகளை குவிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறிய அவர், “மற்ற மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்படாத திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துகிறோம். எதிரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான பிரச்சாரம், பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவசாயிகள் தங்களது உரிமைகளுக்கான குரல் கொடுத்து வந்தார்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியது அதிமுக அரசு” என்று தெரிவித்தார்.
**எழில்**
�,