தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் பிறந்தநாள் வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி வருகிறது. இதை ஒட்டி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து உரையாடி வருகிறார். அதாவது மாவட்டச் செயலாளரின் செல்போனுக்கு வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுகிறார் பிரேமலதா, அந்த செல்போனை ஒரு கணினித் திரையோடு இணைத்து மாவட்ட அலுவலகத்தில் வைக்கிறார்கள். எதிரில் அனைத்து நிர்வாகிகளும் அமர்ந்திருக்கிறார்கள்.
வீடியோ காலில் வந்து பேசும் பிரேமலதா, “கேப்டனின் பிறந்தநாள் வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி வருகிறது. எப்போதுமே மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கேப்டன். அவர் பிறந்தநாளில் எப்போதுமே நாம் நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வந்திருக்கிறோம். இப்போது உள்ள நிலைமையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
மேலும் கட்சி வளர்ச்சிக்காக உறுப்பினர் சேர்க்கையை நாம் அதிகப்படுத்த வேண்டியிருக்கு. அதிமுகவோடு நாம் கூட்டணி வைத்தோம். அந்தக் கூட்டணியால் கட்சிகும் மரியாதை இல்லை.நம்முடைய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எந்த பலனும் இல்லை. நம்மளை வச்சி அவங்க ஆதாயம் அடைஞ்சிருக்கிறாங்களே தவிர, நமக்கு எந்த பலனும் இல்லைங்குறது பல மாவட்ட நிர்வாகிகளோட கருத்தா இருக்கு. உங்க கருத்தையும் நீங்க சொல்லலாம்” என்று பிரேமலதா கூறியதும் சில நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்கின்றனர். தேமுதிக நிகழ்ச்சிகள், நலத்திட்டங்கள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளும் பிரேமலதா தொடர்ந்து,
“வரப் போகிற தேர்தலுக்காக நம்ம மதிக்கும் கூட்டணி பற்றி நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடைசி பதினைந்து நாட்கள்,பத்து ட்நாட்களில் முடிவெடுப்பது போன்ற குழப்பமெல்லாம் இனி இருக்காது. வரும் டிசம்பர் மாதமே கூட்டணி பற்றி நல்ல முடிவெடுத்துவிடுவோம். நமக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள், யார் வேட்பாளர் என்பதையெல்லாம் டிசம்பரிலேயே முடிவெடுத்து தேர்தல் வேலைகளை சீக்கிரமாகவே துவங்குவோம். பெரிய வெற்றியை நாம் அடைவோம்” என்று பேசுகிறார் பிரேமலதா,
ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணி தொடங்கி இரவு 9 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ காலிலேயே பேசுகிறார் பிரேமலதா. ஒரு மாவட்டத்துக்கு ஒரு மணி நேரம் என்றால் ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் பிரேமலதா. இந்த சந்திப்பு கடந்த ஒரு வாரமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
பிரேமலதா சபரீசன் சந்திப்பு என்று மின்னம்பலத்தில் ஆகஸ்டு 5 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “வரும் தேர்தலில் தேமுதிகவுக்கும் தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்த வேண்டியுள்ளது, திமுகவுக்கும் தனது கொங்கு பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியிருக்கிறது. திமுக-தேமுதிக கூட்டணி அமைந்தால் அது இரு தரப்பினருமே பயன்பெறும் கூட்டணியாக இருக்கும் என்ற தொடர்ச்சியான கருத்து வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனும் இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் தேமுதிக கசப்பில் இருக்கும் இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த சந்திப்புக்குப் பிறகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக வீடியோ கால் வழியாக சந்தித்து பேசி வருகிறார். ஆகஸ்டு 25 விஜயகாந்த் பிறந்தநாளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக என இந்தக் கூட்டம் கூட்டப்பட்டாலும் கூட்டணி பற்றியும் முக்கியமான தகவல்களை நிர்வாகிகளோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் பிரேமலதா.
“அதிமுக கூட்டணியில் மரியாதையும் இல்லை, பயனும் இல்லைனு சொல்லிட்டாங்க. அப்படினா திமுக கூட்டணிதானுதானே அர்த்தம். ஏன்னா, அதிமுக திமுக அல்லாத கூட்டணியில் இணைந்தால் தேமுதிகவின் நிலைமை ரொம்ப மோசமாயிடும். அதை மறுபடியும் அடைய வேண்டாம்னு பிரேமலதாவுக்குத் தெரியும். அதனால திமுக கூட்டணியை மனதில் வச்சுதான் இப்படி பேசியிருக்கணும். இதைக் கேட்டு தொண்டர்களும், கீழ் நிலை நிர்வாகிகளும் உற்சாகமாகியிருக்கிறார்கள்” என்கிறார்கள் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள்.
**-வேந்தன்**�,