வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 2 வருடங்களாக இதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். நளினி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவு சென்றதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை சிறை அதிகாரிகள் மறைக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் கூறிய காரணம் நம்பும் அளவுக்கு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“சிறை அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டபோது, நளினி மற்றொரு கைதியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாகக் கூறினர். இதுதொடர்பாக ஜெயிலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரவு 8 மணியளவில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சண்டையால் வருத்தமடைந்த நளினி தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் கூறினர்” என்றார் புகழேந்தி.
மேலும், “கைதிகளுக்கு இடையிலான இத்தகைய சண்டைகள் மிகவும் பொதுவானவை. இது நளினி முடிவின் பின்னணியில் இருக்கக்கூடும் என்று நம்புவது கடினம். இதன் பின்னணியில் இன்னும் தெளிவும் விசாரணையும் இருக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
ஊரடங்கு ஆரம்பித்த மார்ச்சுக்கு முன்பு நளினி தனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததாகவும், அப்போது அவர் உற்சாகமாக இருந்ததாகவும் வழக்கறிஞர் கூறினார். நளினி தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
முன்னதாக தன்னை சட்டவிரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
**எழில்**�,