பிரதமர் வருகை – எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செக் !

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி மதுரைக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் சூழலில் அவர் வருவாரா மாட்டாரா என சந்தேகம் ஒரு புறம் இருக்க, பா.ஜ.க.வும் எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளன.

இப்பொதெல்லாம் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தைக்கூட பெரிய திருவிழாவைப் போல நடத்திக்காட்டிவருகின்றன. இந்த நிலையில், மோடியின் வருகையை வைத்து, பா.ஜ.க. சார்பில் மோடி பொங்கல் என்றே பெயரிட்டு நிகழ்ச்சியை அறிவித்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகள் தரப்பில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, மதுரை, விருதுநகர் வட்டாரத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை கவனப்படுத்துவதில் இறங்கியுள்ளனர்.

இதில் முக்கியமானது, மதுரை விமானநிலையத்தை பன்னாட்டு விமானநிலையமாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை. நடந்துமுடிந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, மதுரை, விருதுநகர் முதலிய தென்மாவட்டங்களைச் சேர்ந்த 11 எம்.பி.களும் விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் மனு அளித்தனர்.

குறிப்பாக, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், அமைச்சருக்கு பன்னாட்டு விமானநிலையம் ஏன் என்று விளக்கமாகக் கடிதம் ஒன்றை அனுப்பினார். தொடர்ச்சியாக, இதைப் பற்றிப் பேசிவருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர், தொகுதிப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்குப் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, பன்னாட்டு விமானநிலையம் ஆகியவற்றைக் கொண்டுவராமல் பா.ஜ.க. அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குறைகூறினார்.

அத்துடன், பிரதமர் மோடியின் வருகையால் தென்மாவட்டங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

”விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்களின் நிலைமை மிக பரிதாபகரமாக இருக்கிறது. இந்தத் தொழில் அழியக்கூடியநிலையில் இருக்கிறது. பட்டாசுத் தொழில் மீதான மைய அரசின் பார்வை மாறவேண்டும். இந்தத் தொழில் தொடர்பானவர்களை பிரதமர் அவசியம் சந்திக்க வேண்டும். மதுரை மாவட்டம் தோப்பூரில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டில் பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார். எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வேலை முடியும் என்று கேட்டால், 2026ஆம் ஆண்டில்தான் முடியும் என்று பதில் சொல்கிறார்கள். ஜப்பான் கடன் உதவியோடு பணி நடப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், எம்ய்ஸ் பற்றி அந்த நாட்டு பிரதமரிடமா கேட்கமுடியும்? மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமானநிலையமாக அறிவிக்கவேண்டும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதான பார்வையை, மோடி வருகையால் மாறவேண்டும்.” என வரிசையாக கோரிக்கைகளை அடுக்கி, இது நிறைவேறுமா என கேள்விக்குறியுடன் முடித்தார்.

மதுரைக்கு வந்துவிட்டு மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளைப் பற்றி பிரதமர் பேசாமல் போய்விடுவாரா? பேசினால் உறுதிமொழிகளை அளிப்பாரா? முழுமையாக உறுதியளிப்பாரா, சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என பலவிதமான கேள்விகளை எழுப்பவைத்திருக்கிறார்கள், தென்மாவட்ட எம்.பி.கள்.

**-முருகு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share