முதல்வரின் செயல்பாடுகளை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியில் விமர்சித்தாலும், மனதுக்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று (நவம்பர் 30) வருவாய்த் துறையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “சட்டமன்றத் தேர்தல் ஆக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆக இருந்தாலும், அதை தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. அதுபோன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது மாநிலத் தேர்தல் ஆணையம். இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தலை நடத்துவதற்கான உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுப்பது மாநில அரசின் கடமை. அதை இந்த அரசு செய்து வருகிறது. அதனால் நகராட்சித் தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும்.
கடந்த 20 தினங்களாக முதல்வர், முன்களப் பணியாளர் போன்று செயல்படுவதைப் பார்த்து இருக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் நேரிடையாகச் சென்று, பார்வையிடுவது, நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவது என்பது. எதிர்காலத்தில் இதை நிவர்த்தி செய்வதற்கான பயணமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆட்சியாளர்கள் போல் இல்லாமல், எதனால் சேதம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யும் அரசாக இருக்கும். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், அந்தளவுக்கு சேதம் ஏற்படவில்லையென்றால், அதற்கு முதல்வரின் சீரிய நடவடிக்கைகள்தாம் காரணம். தற்போது இருக்கக்கூடிய குறைகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை முதல்வர் மாற்றுவார்.
முதல்வரின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி வெளியே விமர்சித்தாலும், மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார், முதல்வரின் சுறுசுறுப்பான பணியை பார்த்து, தங்களது செல்வாக்கு சரிந்துவிடும் என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் அந்தந்தப் பகுதி மருத்துவர்கள் குழுவால் கவனிக்கப்பட்டு நோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து தடையால் நிலவிய உரத்தட்டுப்பாடும் போர்க்கால அடிப்படையில் முதல்வரால் சீர் செய்யப்பட்டு, தட்டுப்பாடு சரி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
**-வினிதா**
�,