எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு: பன்னீர் கண்டனம்!

Published On:

| By Balaji

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் சந்திப்பில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் நேற்று காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தகவலறிந்து அங்கு விரைந்த புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததால், காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

கோவையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்துவதாகவும் பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், “. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை , புதுச்சேரி போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share