டிஜிட்டல் திண்ணை: ஆயிரம்-ஐநூறு: உள்ளாட்சித் தேர்தலின் உள்நிலவரம்!

politics

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வழியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், மற்றும் அனைத்து அமைச்சர்களும் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதுபோல அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

கமல்ஹாசன், சீமான், அண்ணாமலை என பல கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தால் உள்ளாட்சித் தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சாரங்கள் எல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தேர்தலுக்கு நெருக்கமாக அதாவது ஒரு சில நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக திமுக அதிமுக இரு கட்சிகளிலும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திமுகவில் ஒவ்வொரு மாவட்ட அமைச்சரிடமும் தேர்தல் செலவை பார்த்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. வளமான துறைகளை கொண்ட அமைச்சர்களே… தங்களுக்கு சொந்த மாவட்டம், பொறுப்பு மாவட்டம் என இரட்டை சுமையாக இருக்கிறது என்கிறார்கள்.

வளமான துறைகள் இல்லாத சாதாரண துறை அமைச்சர்களோ தங்களால் இவ்வளவு செலவு பண்ண முடியாது என்று கூறி வருகிறார்கள்.
இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரிடம் நீங்கள் பாதி செலவை ஏற்றுக் கொள்ளுங்கள் நாங்கள் பாதி செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்று அமைச்சர்கள் பேசி முடித்திருக்கிறார்கள்.

மேலும் மாநகராட்சிகளுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாகவும் நகராட்சிகளுக்கு எம்.எல்.ஏ.க்களை பொறுப்பாளர்களாகவும் திமுக தலைமை வாய்மொழி உத்தரவு மூலம் நியமித்துள்ளது.

பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள எம்எல்ஏக்கள், ‘பத்து வருஷமா எதிர்க்கட்சியாக இருந்து செலவு பண்ணினோம். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாங்கின கடனையே இன்னும் அடைக்கலை. அதுக்குள்ள இவ்வளவு பெரிய செலவா என்று குமுறலை நெருக்கமானவர்களிடம் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என திமுகவில் நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல். பொங்கல் பண்டிகைக்கு ரொக்க தொகை தரவில்லை என்ற குறை மாநகராட்சியாக இருந்தாலும் கூட அடித்தட்டு மக்களிடம் இருப்பதை உணர்ந்து ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என திமுக முடிவெடுத்துள்ளது. இதுவரை தலைமையிடம் இருந்து எந்த தொகையும் வரவில்லை என்றபோதும் அமைச்சர்கள், மேயர் மற்றும் சேர்மன் பதவிக்காக முடிவு செய்யப்பட்டு இருப்பவர்கள் சேர்ந்து தற்போது செலவுகளை சமாளிக்க திட்டம் போட்டிருக்கிறார்கள்.

திமுக தரப்பில் இப்படி ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தர இருக்கும் தகவல் அதிமுகவின் நகர செயலாளர்கள் மூலமாக மாவட்டச் செயலாளர்களுக்கு சென்று அங்கிருந்து தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது எதிர்க்கட்சியான நாம் 500 ரூபாயாவது கொடுக்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வகையில் சேலம் தவிர்த்து மற்ற இடங்களில் வாக்குக்கு 500ரூபாய் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மாவட்ட நகராட்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி தனது இமேஜை நிலைநிறுத்த வேண்டி தாராளமாக செலவு செய்கிறார். அதுபோல கோவை மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மிக தாராளமாக செலவு செய்து வருகிறார்.
மற்ற மாவட்டங்களில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘சட்டமன்றத் தேர்தலிலேயே நீங்கள் சரியாக செலவு செய்யவில்லை. செலவு செய்திருந்தால், நாம் இன்னும் அதிக தொகுதிகள் ஜெயித்து இருக்கலாம். அதனால் இப்போது கட்சிக்காக செலவு செய்யுங்கள்’ என்று குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்களை எடப்பாடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்படியும் மந்தமாக இருக்கும் சில பகுதிகளுக்கு தானே பணம் அனுப்புவதாகவும் எடப்பாடி கூறியுள்ளார். கட்சியில் தனது பிடிமானத்தை இறுக்குவதற்காக இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி.
திமுக அதிமுக இரு கட்சிகளிலும் இதுதான் இப்போதைய பணப்பட்டுவாடா நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *