அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்தை விமர்சித்துப் பேசி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியதற்காக திமுகவின் விவசாய அணி செயலாளராக இருந்த கே.பி. ராமலிங்கம் அண்மையில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஜூன் 12 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய கே.பி. ராமலிங்கம் சந்திப்புக்குப் பின் வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
“மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கவே சந்தித்தேன். கொரோனா நேரத்தில் அரசியல் ரீதியாக நான் முதல்வரை சந்திக்கவில்லை. இங்கே போக வேண்டும், அங்கே போக வேண்டும் என்பதற்கான நேரம் இதுவல்ல. இப்போதைய நிலையில் மக்களை அரசுதான் காப்பாற்ற முடியும். ஆட்சியாளர்கள்தான் காப்பாற்ற முடியும். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அவர்களுக்கு ஊக்கம் தர வேண்டும்” என்றவர் திமுக பற்றியும் பேசினார்.
“திமுகவில் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு இயக்கத்தைக் காண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுகவினர் செய்த வசூல் விவரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஸ்டாலின் தன் கட்சி நிதியில் இருந்து மக்களுக்குக் கொடுத்தாரா? சென்னை சில்க்ஸ், போத்தீஸ் என எந்தெந்த ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் திமுக வசூல் நடத்தியது பற்றியெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் அதை வெளியிடும் நேரம் இதுவல்ல” என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறிச் சென்றார் கே.பி. ராமலிங்கம்.
**-வேந்தன்**
�,