காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவர் விடுதலையானார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.
அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் அரசு இன்று (மார்ச் 13) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பரூக் அப்துல்லா மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அவரை தடுப்புக் காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் மூன்று மாத காலத்துக்கு மேல் சிறையில் இருந்தால் அது குறித்து பொது பாதுகாப்பு சட்ட ஆலோசனை ஆணையம் பரிசீலனை செய்து சிறை காவலை நீட்டிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.ஏற்கனவே இரண்டு முறை பரூக் அப்துல்லாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவையடுத்து 7 மாதங்களுக்குப் பின் பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்பு வீட்டின் முன்பு திரண்டிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர் “இன்று நான் சுதந்திரமாக இருக்கிறேன். தற்போது நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நான் டெல்லி சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளேன். அங்கு உங்கள் அனைவருக்காகவும் பேசுவேன்” என்று தெரிவித்தார்.
**எழில்**�,”