Bஆளுநர் மாளிகை இடமாற்றம்?

Published On:

| By admin

தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உரசல் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து முதல்வருக்கே வழங்கும் சட்டத் திருத்தமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு முதல்வரை வேந்தராக ஆக்கும் தீர்மானமும் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த 25ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நீட் தேர்வு எதிர்ப்பு பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் மாநில உரிமை மீட்புக் கூட்டமாக பெரியார் திடலில் நடந்தது. அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்று கொஞ்ச நேரம் அவருடன் நடப்பு அரசியல் சூழல் பற்றி பேசிக்கொண்டிருந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

அப்போது அவர், ‘நமது ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததை விட நன்றாக நடக்கிறது. ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசுக்கு நாம் பயப்பட தேவையில்லை. இப்போதைய ஆளுநர் மாளிகை சுமார் 160 ஏக்கர் நிலப் பரப்பில் விரிந்து கிடக்கிறது. இதை தமிழக அரசு வேறு பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம்.
ஏற்கனவே முதல்வராக இருந்த ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இராணி மேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களை தேர்வு செய்தார்‌. ஆனால் நடக்கவில்லை. கலைஞர் ஓமந்தூரார் தோட்டத்திலேயே புதிய தலைமைச் செயலகத்தை கட்டியும் அடுத்து வந்த அதிமுக அரசு அதை மருத்துவமனையாக மாற்றி விட்டது.
இந்த நிலையில் தற்போதைய ஆளுநர் மாளிகையை புதிய தலைமைச் செயலகம் அல்லது வேறு ஏதேனும் அரசு அலுவலகம் கட்டுவதற்கு பயன்படுத்தலாம். இவ்வளவு பெரிய இடத்தில் ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. அவருக்கு என தனியாக ஒரு பங்களாவை ஒதுக்கலாம்’ என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதேபோல மேலும் சிலரும் முதல்வரிடம் தற்போதைய ஆளுநர் மாளிகை பொதுப்பணித்துறை வசம்தான் உள்ளது. எனவே ஆளுநர் மாளிகையை வேறு இடத்துக்கு மாற்றலாம்’ என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் சிந்தனை செல்வன் கூட இதை வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையை இடம் மாற்றுவது குறித்து தனக்கு வந்திருக்கும் ஆலோசனைகள் பற்றி முக்கியமான இரண்டு வழக்கறிஞர்களிடம் முதல்வர் விவாதித்துள்ளார். அவர்கள் இருவருமே முதல்வரின் நம்பிக்கைக்குரியவர்கள். அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்ற வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நடத்தியவர்கள்.

அவர்கள் முதல்வரிடம், ‘இப்போது நமக்கு இருக்கும் நிதி சுமையில் ஆளுநர் மாளிகையை மாற்றி அங்கே வேறொரு கட்டிடம் கட்டுவது என்பதெல்லாம் சாத்தியக் குறைவானது தான். இப்போதைய ஆளுநர் மாளிகையைச் சுற்றி ரிசர்வ் ஃபாரஸ்ட் எனப்படும் வனப்பகுதி உள்ளது. எனவே சூழலியல் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்வதால் ஆளுநர் மாறிவிடப் போவதில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.
தொடர்ந்து முதல்வருக்கு இது குறித்து கருத்துருக்கள் சென்று வருவதால் அவரும் இது பற்றிய தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share